அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி கடும் கண்டனம்


தமிழக அரசு பாரம்பரியமிக்க அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றும் தமிழக அரசின் முடிவிற்கு மயிலாடுதுறை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது .
அண்மையில் நிருபர்களை சந்தித்த தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்தால் எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவித்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தி அண்ணாவின் பெயரால் ஆட்சி நடத்திவரும் எடப்பாடி அரசு பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு திராவிட பெருந்தலைவன் அண்ணாவின் பெயரை இருட்டடிப்பு செய்ய வேண்டும் என்ற பாரதிய ஜனதா கட்சியின் திட்டத்திற்கு ஒத்துழைக்க தமிழக அரசு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு பெயர் மாற்றம் செய்ய எத்தனித்துள்ளது. திராவிடக் கட்சி என தன்னைக் கூறிக்கொள்ளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு அண்ணா பெயரில் உள்ள பல்கலைக் கழகத்தை பெயர் மாற்றம் செய்வது ஏற்க முடியாத ஒன்றாகும். அதுமட்டுமல்ல அந்த அரசின் மூத்த அமைச்சராக இருக்கக் கூடிய உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்லியிருப்பது அண்ணாவின் பால் இந்த அரசுக்கு உள்ள அக்கறையை காட்டுகிறது. அதுமட்டுமல்ல 450க்கும் மேற்பட்ட கல்லூரிகளை உள்ளடக்கிய அண்ணா பல்கலைக்கழகம் 1979 இல் அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் ஆகும்.
கலைஞர் ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழகம் உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகமாக மாற்றினார். இன்றைக்கு உலக அளவில் அண்ணா பல்கலைக்கழகம் ஒரு சிறந்த பல்கலைக் கழகமாக விளங்குகிறது என்றால் அது திராவிட முன்னேற்றக் கழகத்தின் 11 ஆண்டு ஆட்சிக் காலத்தில் அண்ணா பல்கலைக்கழக வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கி அண்ணா பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியை தமிழக முதலமைச்சராக இருந்த உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்கள் நேரடியாக கவனம் செலுத்தியதே ஆகும். தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றினால் உலகளாவிய பெயர் பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் பாதிக்கக்கூடிய அபாய நிலை உள்ளது. காவிகளின் திட்டப்படி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு பெயர் மாற்றம் செய்ய தமிழக அரசு முனைவதாக சந்தேகப்படுகிறோம். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு பெயர் மாற்றம் செய்யும் தமிழக அரசின் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.