மயிலாடுதுறை மாவட்டத்துக்கு புதிய காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு.


மாவட்ட சிறப்பு அலுவலர் லலிதா திறந்துவைத்தார். நாகையில் இருந்து மயிலாடுதுறை கோட்டத்தை பிரித்து தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். தொடர்ந்து, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு மயிலாடுதுறை புதிய மாவட்டத்திற்கு எல்லை வரையறை செய்வதற்காக சிறப்பு அதிகாரியாக லலிதா ஐ.ஏ.எஸ் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஐபிஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டு பணிகளை மேற்கொண்டு வருக்pன்றனர். மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரி லலிதா ஐஏஎஸ் அலுவலகமும், டிஎஸ்பி அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகமும் தற்காலிக முகாம் அலுவலகமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் திருவாரூர் சாலையில் உள்ள வேளாண்மைதுறை அலுவலக கட்டட மாடியில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மாற்றப்பட்டு அதன் திறப்புவிழா இன்று நடைபெற்றது. புதிய அலுவலகத்தை மாவட்ட சிறப்பு அதிகாரி லலிதா ஐஏஎஸ் திறந்து வைத்தார். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஐபிஎஸ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க வேளாண்மைதுறை அலுவலகத்தில் செயல்படும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தன்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என ஸ்ரீநாதா ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.