மாஸ்க் அணியாதவருக்கு பெட்ரோல், டீசல் இல்லை


வாகன ஓட்டிகள் முக கவசம் அணிந்து செல்வதை, தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக அரசுக்கு, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து, தமிழக பெட்ரோலிய விற்பனையாளர் சங்கத் தலைவர் முரளி கூறியதாவது: தமிழகத்தில், வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பணியில், அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், அனைத்து பெட்ரோல் ‘பங்க்’குகளிலும், முக கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே, பெட்ரோல், டீசல் விற்கப்படுகிறது.
முக கவசம் இல்லாமல் வருவோருக்கு, விற்பனை செய்வதில்லை. இருப்பினும் சிலர், முக கவசம் அணியாமல் வந்து, தவிர்க்க முடியாத காரணங்களை கூறுகின்றனர். அவர்களால், வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, அனைத்து வாகன ஓட்டிகளும், முக கவசம் அணிந்து செல்வதை உறுதி செய்ய, போக்குவரத்து போலீசார், சுகாதார துறையினர் வாயிலாக, அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராதம் வசூல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்போது தான், பெட்ரோல் பங்க்குகளில், பெட்ரோல், டீசல் வாங்க வரும் அனைவரும், முக கவசம் அணிந்து வருவதை உறுதி செய்ய முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.