தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம்


தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்றம்.இந்த வழக்கை விசாரித்த வந்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.ஹேமலதா, மத்திய, மாநில அரசுகள் உருவாக்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும், ஆன்லைன் வகுப்புகளுக்கான நேரத்தை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளனர்.
சென்னை உயா்நீதிமன்றத்தில் புத்தகரம் பகுதியைச் சோ்ந்த சரண்யா மற்றும் விமல் மோகன் ஆகியோா் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க கோரி தனித்தனியாக வழக்கு தொடா்ந்திருந்தனா். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க முயடிது என்றும், விதிமுறைகளை மீறினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.
முன்னதாக, இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசு தரப்பில் ஆன்லைன் வகுப்புகளுக்கு வழிகாட்டு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தனியாா் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு விதிமுறைகள் எவ்வாறு பின்பற்றப்படுகின்றன, மலைப்பகுதிகளில் உள்ள மாணவா்களுக்கு எப்படி கல்வி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை உயா்நீதிமன்றம் எழுப்பியிருந்தது.