தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்து கொரோனா தொற்று ஏற்பட்டால் இலவச சிகிச்சை இல்லை


கர்நாடகாவில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பிற மாவட்டங்களைக் காட்டிலும் பெங்களூரு மிகவும் பின் தங்கியுள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட பெங்களூருவில் இதுவரை வெறும் 35 சதவீத சுகாதாரப் பணியாளர்களும் 13 சதவீத முன்களப் பணியாளர்களும் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத் பிரசாத் கூறியதாவது:
கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது என்பது மக்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அரசு சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும்போது, அதனை அவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசிக்கான ஒட்டுமொத்த செலவையும் அரசு ஏற்றுக்கொண்டு, மக்களின் நலனுக்காக இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பு தெரிவிப்பவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதற்கான சிகிச்சை செலவையும் அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை ஏற்க முடியாது. எனவே கரோனா தடுப்பூசியை மறுப்பவர்களுக்கு இலவச சிகிச்சை கிடையாது என அரசுக்கு திட்ட அறிக்கை ஒன்றை பெங்களூரு மாநகராட்சி சார்பில் அனுப்ப இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 11,610 புதிய தொற்று அதிகரித்ததால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,09,37,32 ஆக அதிகரித்துள்ளது.
நோயிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1,06,44,858 ஆக உள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 100 பேர் ஆக இருந்ததால் பலி எண்ணிக்கை 1,55,913 ஆக அதிகரித்துள்ளது.தற்போது நாட்டில் 1,36,549 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மகாராஷ்ட்ராவில் பலி எண்ணிக்கை 51,591 ஆகவும் தமிழ்நாட்டில் பலி எண்ணிக்கை 12,422 ஆகவும் டெல்லியில் 10,894 ஆகவும் மேற்கு வங்கத்தில் 10,235 ஆகவும் கர்நாடகாவில் பலி எண்ணிக்கை 12,273 ஆகவும் உ.பி.யில் 8,704 ஆகவும் ஆந்திராவில் 7,163 ஆகவும் உள்ளது.
இந்தியா 37% தடுப்பூசிகளை இலவசமாக ஏற்றுமதி செய்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 84 லட்சம் பேருக்கு கோவிட் 19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வேகம் குறைவாக உள்ளதால் ஜூலை மாதத்திற்குல் 25 கோடி மக்களுக்கு வாக்சின் போடும் இலக்கை எட்டுவது கடினம் எனக் கூறப்படுகிறது.
உலக் அளவில் தடுப்பூசியில் அமெரிக்கா 52.8 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போட்டு முதலிடத்தில் உள்ளது, சீனாவில் 40.5 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பிரிட்டனில் 15.6 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 4ம் இடத்தில் இந்தியா உள்ளது.
Source: News18 Tamil