இன்று வந்தது அதே தினம்: ஜனவரி 23, 1897, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 123வது பிறந்த நாள்

நம் நாட்டின் ஜனநாயக ராஜபாட்டையில் இன்று அதிகார துஷ்பிரயோகங்கள் எனும் பாறைகளும் முள்களும் கத்திகளும் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் அதை செப்பனிடுவதற்காக இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தங்களையே காணாமல் அடித்துக்கொண்ட முன்னோடித் தியாகிகளை பேசுவது இன்றுள்ள காலகட்டத்தில் புயல்காற்றில் பொரிவிற்பது போலாகும்.

எனினும், இளைய தலைமுறைகளிடம் இதுபோன்ற உன்னத தியாக சீலர்களைப் பற்றி பேசுவதன்மூலம், இளமை துளிர்விடும் நேர்மையான பச்சைமனங்களில் நாட்டைப் பற்றிய நம்பிக்கையை விதைக்க அது பயன்படும்.

பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த காலகட்டம் அது.

நேதாஜி, மேற்கு வங்கத்தில் 1897ல் ஜனவரி 23ல் கட்டாக் எனும் இடத்தில் செல்வசெழிப்பான குடும்பத்தில் பிறந்தவராயினும் கொடுமை கண்டு போங்கும் போராட்டக் குணத்தையே அவர் பெற்றிருந்தரர்.

நேதாஜியின் பெற்றோர் அவரை லண்டனுக்கு அனுப்பி ஐசிஎஸ் படிக்கவைத்தனர். ஆனால் சுபாஷ் சந்திர போஸ் அரசுப் பணியில் சேர மனமில்லாதவராக இருந்தார்.

இந்தியாவின் அனைத்து சிற்றரசுகளையும் தங்கள் பீரங்கிகளாலேயே காலி செய்த அந்நிய சக்திகளிடம் அஹிம்சை போராட்டம் வேலைக்காகாது என்று அவர் முடிவெடுத்தார்.

பிரிட்டிஷாரை போர்மூலமாகவே எதிர்கொள்ளவேண்டுமென்று இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்தார். அவரது முயற்சிகளுக்கு கரம்கோர்க்க ஓரளவுக்கு மக்களும் திரண்டனர். ஆனால் மிதவாதிகளின் பின்னால் அணிவகுத்தவர்களை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிகமிக குறைவுதான். தன் கொள்கைக்கு ஆதரவளித்தவர்களை அழைத்து உற்சாகத்தோடு ராணுவப் பயிற்சிகளை அளித்தார். இதில் தமிழ்நாட்டிலிருந்து 600க்கும் மேலானவர்கள் இந்திய தேசிய ராணுவத்தில் பயிற்சிபெற்றனர்.

சுபாஷ் சந்திரபோஸ் தனது லட்சியத்தை நிறைவேற்றுவதற்குள்ளாகவே அவர் மர்மமான முறையில் ஒருநாள் இறந்துபோனது மாபெரும் சோகம். இந்திய சமூகத்தை புதியதாக வடிவமைக்க வேண்டுமென்ற ஒரு லட்சியவாதியாகத் திகழ்ந்த சுபாஷ் சந்திர போஸ், 1945 ஆகஸ்ட் 15 அன்றுதான் இறந்ததாக கருதப்படுகிறார்.

மிதவாதம், தீவிரவாதம்

இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் பொறுத்தவரை, தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில்தான் வேரூன்றியதற்கான வரலாறுகள் நிறைய உள்ளன. ஆனால்  வட இந்தியாவில் மிகமிகத் தாமதமாகவே அது பரவியது.

காங்கிரஸ் தோன்றிய பிறகு உருவான வரலாற்றில், கோபால கிருஷ்ண கோகலே தலைமையில் மிதவாத இயக்கமும் பாலகங்காதர் திலகர் தலைமையில் தீவிரவாத இயக்கமும் தோன்றின என சொல்லப்படும் வரலாறு மிகமிக தவறான பொருளில்சொல்லப்படும் ஒன்றாகும்.

அவர்களிடையே சொல்லப்படும் மிதவாதமும் தீவிரவாதமும் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கானதல்ல, இந்திய கலாச்சார சீர்திருத்தத்தில் ஏற்பட்ட விருப்புவெறுப்பு தொடர்பானது.

அதற்கு பின்னர் உருவான காந்தி, போஸ் முரண்பாடுகளைப் பற்றி பேசும்போதுகூட உண்மையான மிதவாதமும் தீவிரவாதமும் என்னவென்பது குறித்து தொடர்ந்து அதற்கு சரியான பொருள்களுக்கு அப்பாலேயே புரிந்துகொள்ளப்பட்டு வந்துள்ளன. உதாரணமாக காந்தியை அஹிம்சைவாதி என்று பொத்தாம்பொதுவாக சொல்வது ஒன்று.

ஜாலியன்வாலா பாக்கில் இந்தியர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டபோது அதற்கு தலைமை ஏற்று நடத்திய ஜெனரல் டயரைச் சுட்ட உத்தம் சிங் சுட்டபோது அதனைக் கண்டித்து அறிக்கை வெளயிட்டார் காந்தி. அப்போது, உத்தம் சிங்கைப் பாராட்டி நேதாஜி கடிதம் அனுப்பியபோது காந்திஜிக்கும் நேதாஜிக்கும் கருத்துவேறுபாடு அதிகரித்தது.

காந்தியின் பாதையை மட்டுமே ஆதரித்துபோல நடித்து அதைக்கொண்டு தனது மெக்காலே சிந்தனைவழி தளங்களை விரிவுபடுத்திக் கொள்வதற்கான பாசாங்குகளையே பிரிட்டிஷ் அரசு செய்தது.

பிரிட்டிஸாரின் எவ்வகையான போக்கையும் சந்தேகத்தோடு அறிந்திருந்த சுபாஷ் சந்திரபோஸின் எதிர்ப்புணர்வை அடக்க அவரை கடல்கடந்து மாண்டலே சிறையில் தள்ளியது உள்ளிட்ட சகல இடையூறுகளையும் பிரிட்டிஷ் செய்தது.

காந்தியை சுபாஷூம், சுபாஷை காந்தியும் ஆதரித்ததும் எதிர்த்ததும் உண்டு. அவை அந்தந்த நேரத்து போராட்டங்கள்.. அதையொட்டி உருவான பிரச்சினைகள் தொடர்பானது.

இரண்டாம் உலகப் போர்

இரண்டாவது உலகப்போரில் பிரிட்டிஷாரின் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் மாறான ஒரு நிலைப்பாட்டில் சுபாஷ் சந்திரபோஸ் இயங்கினார். பிரிட்டிஷாருக்கு அடிமைப்பட்டிருப்பதையே எதிர்க்கும் அவருக்கு அவர்களது உலகப்போர் நிலைப்பாட்டில் மட்டும் எப்படி உடன்பாடிருக்கும்.

இதையே தக்க தருணமாக கருதி பிரிட்டிஷாருக்கு எதிராக போரிட அவர் நிதி திரட்டவும் முயன்றார். நேதாஜியின் இச்செயல் பிரிட்டாஷரை கோபமடையச் செய்ததால் 1940 ஜுலையில் சிறையில் அடைக்கப்பட்டார். நிலையில் பிரிட்டிஷ் எதிரிநாடுகளுடன் ரகசிய தொடர்புகொண்டு இந்தியாவை எப்படியாவது விடுவிக்க

முயல்வதற்காக நேதாஜி சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். உண்ணாவிரதம் அவரது உடல்நிலையை மிகவும் பாதித்தது. அவருக்கு ஏதாவது நேர்ந்தால் அது அடிமை இந்திய மக்களிடம் மேலும் வெறுப்பு ஏற்படும் என்று யோசித்த பிரிட்டிஷ் அவரை உடனடியாக விடுதலை செய்தது.

சிலநாட்களிலேயே கண்காணிப்புகளை மீறி இந்தியாவிலிருந்து நேதாஜி வெளியேறினார். இச்சமயத்தில்தான் அவர் ஹிட்லரை சந்தித்து இந்திய விடுதலைக்காக பிரிட்டிஷ்ஷுக்கு எதிராக உதவி கோரினார். அவரும் தன்னுடைய ஒப்புதலை அளித்தார்.

இச்சமயத்தில் தாகூரின் ஜனகனமனவை தேசிய கீதமாக்கியது, நீர்மூழ்கிக் கப்பல் மூலமாகவே ஜப்பான் சென்றது, அந்நாட்டின் ராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி பெற முயன்றது எல்லாம் நடந்தது

நேதாஜியின் இந்திய சுதந்திர அரசுக்கு 9 நாடுகள் ஆதரவு

1943ல் சிங்கப்பூரில் சுதந்திர அரசுக்கான பிரகடனத்தை வெளியிட்டது, அதன் தலைவராக தானே தேசிய கொடியை ஏற்றியது என அவரது ஒரு புதியநாட்டுக்கான விடியலுக்காக போராடிய நேதாஜியின் துணிவு வலிமை வாய்ந்தது.

இதற்கு ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, சீனா உள்ளிட்ட 9 நாடுகள் ஆதரவு கிடைத்தது எனினும் முதற்கட்ட முயற்சியிலேயே பிரிட்டிஷிடம் மோதிய போரில் தோல்வியே ஏற்பட்டது.

இந்தியாவில் பெரிய தலைவர்களின் ஆதரவு குறைந்த நிலையில் பல்வேறு உலகநாடுகளைத் திரட்டிய அவரது இடையறாத முயற்சிகள் யாவும் வானாளாவிய உயரம் கொண்டது என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

‘பிறந்த குழந்தை கூட அழுகை எனும் புரட்சி செய்துதான் தன் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்கிறது!’என்ற அவரது கூற்றே அவர் எப்படிப்பட்டவர் என்பதை பறைசாற்றுகிறது. எது எவ்வாறாயினும் சுதந்திர இந்தியாவில் நேதாஜி இல்லாதது மாபெரும் குறைதான்.

நேதாஜியின் மரணம் தாய்பெய்யில் ஒரு வானூர்தி தளத்தில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இது மட்டுமின்றி நேதாஜி மரணம் குறித்து நிறைய மர்மமான தகவல்கள் பரவின.

நேதாஜிக்கு ஆதரவளித்து வந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்ட தலைவர்கள் அவர் இறந்ததாக சொல்லப்பட்ட காலகட்டத்திற்கு பின்னரும்கூட நேதாஜியுடனான தங்கள் சந்திப்பை உறுதி செய்தனர். அதன்பின்னரே விசாரணை கமிஷன்களை நேரு அரசு நியமிக்கத் தொடங்கியது.

ஷாநவாஸ் விசாரணை ஆணையத்திற்கு ஜஸ்டிஸ் முகர்ஜி கமிஷன் அளித்த அறிக்கையில் நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என்றும் சோவியத் ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்று இருக்கலாம் என்றும் கூறியது.

அவர் ரகசிய துறவியாக இந்தியாவிலேயே நீண்டகாலம் மறைந்து வாழ்ந்தார் என்றும் சொல்கிறார்கள்.

இக்கட்டுரையை நிறைவு செய்ய நேதாஜியின் வரலாற்றை வைரமுத்துவின் வரிகளிலேயே நாம் இங்கே நினைவுகூரலாம்: ”நேதாஜி, இந்தியாவுக்கு முகவரி பெற்றுத் தருவதற்கான இடையறாத போராட்டத்தில் உன்னுடைய முகவரியையே தொலைத்துவிட்டவன் நீ”.

source:

https://tamil.thehindu.com/opinion/blogs/article26061084.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Leave a Reply

You cannot copy content of this page