தமிழகத்தில் ஊரடங்கு என பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி – ராதாகிருஷ்ணன்


தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என வதந்திகள் பரவி வருகிறது. இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேசிய அளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் அதிகமாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகின்றனர். கொரோனாவுக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்து வருகிறோம் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில், கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது. சூழலுக்கேற்ப முடிவு எடுக்கப்படும். மேலும், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவது அரசின் வேலை அல்ல. கொரோனா பரவலைத் தடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு எடுக்கும். வரக்கூடிய நாட்களில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். முழு ஊரடங்கு வரப்போகிறது. இரவு நேர ஊரடங்கு வரப்போகிறது என்று வீண் வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என தெரிவித்தார்.
Source : News7Tamil