பிறப்பு சான்றிதழில் குழந்தை பெயர் பதிய மேலும் 5 ஆண்டு அவகாசம்


பிறப்பு சான்றிதழில், குழந்தையின் பெயரை பதிவு செய்வதற்கான அவகாசம், மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிறப்பு பதிவு குழந்தைகளின் முதல் உரிமை. குழந்தை பிறந்த, 21 நாட்களுக்குள், பிறப்பை பதிவு செய்து, இலவச பிறப்பு சான்றிதழ் பெறலாம். பிறப்பு சான்றிதழில், குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே, அது முழுமையான சான்றிதழாகும். குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருந்தால், 12 மாதங்களுக்குள், குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர், எழுத்து வடிவிலான உறுதிமொழியை, சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் அளித்து, இலவசமாக பெயர் பதிவு செய்யலாம்.ஓராண்டு முதல், 15 ஆண்டுகளுக்குள், உரிய தாமத கட்டணம் செலுத்தி, குழந்தை பெயரை பதிவு செய்யலாம். திருத்தி அமைக்கப்பட்ட, தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதிகள், 2000ன்படி, 2000 ஜன.,1க்கு முன் பிறந்த குழந்தைகளுக்கு, 2014 டிச., 31 வரை, பெயர் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டது. இந்த அவகாசம் முடிந்த பின், மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு அவகாசம் அளிக்கப்பட்டது.
அதன்படி, 2019 டிசம்பர், 31ல், அவகாசம் முடிந்த நிலையில், மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.ஒரு முறை குழந்தையின் பெயரை பதிவு செய்த பின், எக்காரணம் கொண்டும், மாற்ற இயலாது. எனவே, குழந்தையின் பெயரை, இறுதியாக முடிவு செய்த பின், சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரை அணுகி, உறுதிமொழி படிவம் அளித்து பதிவு செய்யலாம்.கிராம ஊராட்சியில், பிறப்பு பதிவு செய்யப்பட்டிருந்தால், கிராம நிர்வாக அலுவலரையும், பேரூராட்சியாக இருந்தால், செயல் அலுவலர் அல்லது துப்புரவு ஆய்வாளரையும் அணுக வேண்டும்.