விளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்


ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சாதனை படைக்க வயது ஒரு தடையில்லை என்பதை சச்சின் டெண்டுல்கர் நிரூபித்த நாள் பிப்ரவரி 24. கடந்த 2010-ம் ஆண்டு இதே நாளில்தான் அவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்து, இச்சாதனையை படைத்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற வரலாற்றை எழுதினார். இச்சாதனையை படைத்தபோது சச்சினின் வயது 37.
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே குவாலியர் நகரில் நடந்த ஒருநாள் போட்டியில்தான் இந்த சாதனையை படைத்தார் சச்சின் டெண்டுல்கர். இப்போட்டியில் பார்னல் வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டி, தான் ஒரு மிகச்சிறந்த இன்னிங்ஸுக்கு தயாராக இருப்பதை உணர்த்தினார் சச்சின்.
முதல் 90 பந்துகளில் சதத்தை விளாசிய சச்சின், அதன் பிறகு ஆட்டத்தை டாப் கியருக்கு மாற்றினார், தன்னை நோக்கி வீசப்படும் பந்துகளை மைதானத்தின் எல்லைக்கு விரட்டுவதிலேயே குறியாக இருந்தார். அடுத்த 57 பந்துகளில், அதாவது 147 பந்துகளில் இரட்டை சதத்தை எட்டினார். இந்த இரட்டை சதத்தின்போது 25 பவுண்டரிகளையும், 3 சிக்ஸர்களையும் அவர் விளாசினார். கிரிக்கெட் கடவுளாக வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் எடுத்த விஸ்வரூபத்தால், அன்றைய தினம் இந்திய அணி 50 ஓவர்களில் 401 ரன்களைக் குவித்தது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, டிவில்லியர்ஸ் (114 ரன்கள்) சதம் அடித்தபோதிலும் 248 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 153 ரன்களில் அபார வெற்றியை ருசித்தது.
அன்றைய போட்டிக்கு பின்னர் தனது இரட்டை சதத்தைப் பற்றி கருத்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர், ‘கடந்த 20 ஆண்டுகளாக என்னை ஆதரித்து வரும் ரசிகர்களுக்கு இந்த இரட்டை சதத்தை காணிக்கையாக்குகிறேன்’ என்றார்.