24th November 2020

சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள் தேர்வு ரத்து: நம்பிக்கையை தகர்காதிங்க! அ.அப்பர்சுந்தரம்

மயிலாடுதுறையில் இருந்து அ.அப்பர்சுந்தரம் எழுதுகிறார்.  சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள், சமையலர் போன்ற பணிகளுக்கு அரசு சார்பில் அறிவிப்புகள் செய்யப்பட்டன. ஏறக்குறைய எல்லா மாவட்டங்களிலும் உள்ளவர்கள் விண்ணப்பித்து நேர்முகத் தேர்வுக்கும் அழைக்கப்பட்ட நிலையில், திடீரென ரத்து செய்திருப்பது வேதனை அளிக்கிறது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக ரத்து செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இந்த பணிகளுக்கு ஆங்காங்கே உள்ள அரசியல்வாதிகள், ஆளுங்கட்சியினர், அதிகாரிகள் அதிக அளவில் பேரம் பேசுவதாக செய்திகள் வெளிவந்த காரணத்தால்தான் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஒருவித நம்பிக்கையை ஏற்படுத்தி, வேலை இல்லாதவர்களுக்கு ஏதாவது ஒரு வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தோடு விண்ணப்பித்திருந்தவர்கள், ரத்து என்னும் அறிவிப்பால் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

தமிழக அரசு தொடர்ந்து பல விஷயங்களில் திட்டமிடாமல், இதே போல பல அறிவிப்புகளை அறிவிப்பதால் அரசுக்கு பெருமளவில் பொருள் விரயமும், துறை ஊழியர்களுக்கு நேர விரயமும் ஏற்படுகிறது. வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் சீர்குலைக்கிறது.
எனவே, இனியாவது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை அரசு மிகவும் கவனமுடன் வெளியிடுவதுடன், வெளிப்படையாகவும் நேர்மைத் தன்மையுடனும் விதிமுறைகளின் அடிப்படையிலும் குறிப்பிட்ட நேரத்திலும் நடத்த வேண்டும் என்று எதிர்பாக்கிறோம்.