மயிலாடுதுறை சீர்காழி அருகே வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஏர் கலப்பையுடன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொதுச்செயலாளர் கனிவண்ணன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் ஞானசம்பந்தம், பாலகுரு, பாலசுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் லட்சுமணன் வரவேற்று பேசினார்,
நாகை வடக்கு மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராஜகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சரத்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். வேளாண் சட்டங்களை கைவிட வேண்டும். விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கிகளை மத்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வரக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் சிவராமன், கொள்ளிடம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பானு சேகர், மாவட்ட இளைஞரணி தலைவர் சரவணன், விவசாய சங்க தலைவர் சிவப்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கட்சியினர் ஏர் கலப்பையுடன் ஊர்வலம் செல்ல முயன்றனர். இதில் பங்கேற்ற கட்சியினர் 270 பேரை சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.