அலறிக் கிடக்கும் சீர்காழி… வீடுபுகுந்து 2 பேரின் கழுத்தை அறுத்த கொள்ளையர்களில் ஒருவர் போலீசாரால் என்கவுண்டர்


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தீரன் பட பாணியில் நகைக்கடை உரிமையாளரின் வீடு புகுந்து தாய் – மகனை கொடூரமாக கொன்றுவிட்டு, 15 கிலோ நகைகளுடன் தப்பிச் சென்ற கொள்ளையர்களில் ஒருவனை போலீசார் சுட்டுக் கொன்றனர். இரண்டு பேரை பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சீர்காழி ரயில்வே சாலையில் வசித்து வரும் தன்ராஜ் என்பவர் தருமகுளம் பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். காலை 6 மணியளவில் இவரது வீட்டுக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, உள்ளேயிருந்தவர்கள் கதவைத் திறந்துள்ளனர்.
தபதபவென உள்ளே நுழைந்த 3 பேர் கொண்ட கும்பல், தன்ராஜின் மனைவி ஆஷாவையும் அவரது 24 வயது மகன் அகிலையும் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்தனர்.
தொடர்ந்து உள்ளே சென்றவர்கள் தன்ராஜையும் அவரது மருமகள் நெக்கல் என்பவரையும் கத்தியால் தாக்கிவிட்டு, அறையில் வைக்கப்பட்டிருந்த 15 கிலோ நகைகளை இரண்டு பைகளில் அடைத்து, தன்ராஜின் காரிலேயே எடுத்துச் சென்றனர்.
வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்கையும் கொள்ளையர்கள் தங்களோடு எடுத்துச் சென்ற நிலையில், தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்த தன்ராஜையும் நெக்கலையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில், கொலையாளிகள் எடுத்து சென்ற கார் சீர்காழி புறவழிச்சாலை பனிகிருப்பு கிராமத்தில் நிற்பதை கண்டுபிடித்தனர். அதே நேரம் எருக்கூர் பகுதியில் உள்ள வயல் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக 3 பேர் பதுங்கியிருப்பதைப் பார்த்த கிராமத்தினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்படி அங்கு வந்த போலீசார், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மனிஷ், ரமேஷ் ஆகிய இருவரை பிடித்தனர்.
மற்றொரு நபரான மணிப்பால் என்பவன் தப்பி ஓடியுள்ளான். அவனை பிடிக்க போலீசார் துரத்திய போது தாக்குதல் நடத்த மணிப்பால் முயன்றதாக சொல்லப்படுகிறது. இதனால் அவனை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.
பிடிபட்ட இருவரிடமிருந்து நகைகள் எடுத்துச் செல்லப்பட்ட இரு பைகளில் ஒரு பை பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மற்றொரு பையை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
Source: Polimer News