மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்தம் தனியார் மருத்துவமனைகள் இன்று இயங்காது


மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை இந்திய மருத்துவ கழகம் அறிவித்திருப்பதால் இன்று பகலில் தனியார் மருத்துவமனைகள் இயங்காது.
ஆயுர்வேதா முடித்த டாக்டர்களும் நவீன அறிவியல் அறுவை சிகிச்சைகளை பயிற்சி எடுத்து மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு நாடு முழுவதுமுள்ள அலோபதி டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதன்தொடர்ச்சியாக இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தை இந்திய மருத்துவ கழகம் அறிவித்துள்ளது.
எனவே நாடு முழுவதும் இன்று காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை தனியார் மருத்துவ மனை, கிளினிக், ஸ்கேன், பரிசோதனை கூடங்கள் செயல்படாது. மதுரையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவமனை, ஸ்கேன் மையங்கள் போராட்டத்தில் பங்கேற்கின்றன. அவசர சிகிச்சைகள் மட்டும் வழங்கப்படும்.
இந்திய மருத்துவ கழக மதுரை கிளை தலைவர் அழகவெங்கடேசன் கூறுகையில், ”சால்ய தந்திரம் என்ற பெயரில் ஒரு கலப்பட மருத்துவமுறையை உருவாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. முன்அனுபவமில்லா இளங்கலைஆயுர்வேத டாக்டர்களை எம்.எஸ்., படிக்க அனுமதிப்பது தவறு. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் தான் பாதிக்கப்படுவர். இந்த திட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்,” என்றார்.