தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவை தலைவருக்கு தமிழ்ச் செம்மல் விருது


தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவையின் மாநிலத் தலைவரும், தமிழ்நாடு தமிழ் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவருமான பேராசிரியர் துரை. குணசேகரனுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் தமிழ் செம்மல் விருது வழங்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இவ்விருதினை வழங்கினார்.
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியின் துணை முதல்வராக, தமிழாய்வுத் துறைத் தலைவராக பொறுப்பு வகித்தவர் பேராசிரியர் துரை.குணசேகரன். தமிழ்ப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக் கழகங்களின் பேரவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 60 ஆய்வியல் நிறைஞர், 16 முனைவர் பட்டதாரிகளை உருவாக்கிய இவர் பதிப்பு நூல்களுடன் 10 படைப்புகளையும் வெளியிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் உருவான பின்னர் விருது பெரும் முதல் விருத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.