குத்தாலம் அருகே குப்பைத்தொட்டியில் கிடந்த கோவில் கிரீடம்: நிர்வாகியிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிபவர் சித்ரா இவர் வழக்கம் போல் தினசரி குத்தாலம் பேரூர் பகுதிகளில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார் இந்நிலையில் குத்தாலம் பஞ்சு கார செட்டித் தெருவில் உள்ள குப்பைத்தொட்டியில் குப்பையை எடுக்கும்போது அதில் வெள்ளி கிரீடம் கிடப்பதைக் கண்டார். அருகில் இருந்தவரிடம் விசாரிக்கும்போது அது பஞ்சர செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி தலையில் உள்ள வெள்ளி கிரீடம் என்பது தெரியவந்தது. இதனையடுத்து தூய்மைப் பணியாளர் சித்ரா குப்பைத் தொட்டியில் இருந்த கிரீடத்தை எடுத்து தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் நிர்வாகி முத்துக்குமரனிடம் ஒப்படைத்தார். இதுபற்றி ஆலய நிர்வாகி கூறுகையில் சுவாமியின் கழுத்திலுள்ள மாலைகளை சுத்தம் செய்து குப்பைத் தொட்டியில் போடும் போது கிரீடம் குப்பைத் தொட்டிக்கு சென்றதாக கூறினார். குத்தாலம் பேரூராட்சி தூய்மை பணியாளர் சித்ராவின் இச்செயல் குத்தாலம் பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பலரும் சித்ராவை பாராட்டி வருகின்றனர்.