மயிலாடுதுறையில் பெஸ்ட் கல்லூரியில் பாரம்பரிய உணவு திருவிழா
மயிலாடுதுறை அருகில், மல்லியம் கிராமத்தில் உள்ள பெஸ்ட் கல்லூரியில் பாரம்பரிய உணவுகளை மீட்டெடுக்கும் வகையில் மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் மற்றும் ஜேசிஐ மயிலாடுதுறை சங்கத்துடன் இணைந்து பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது.
விழாவில் 50–க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு 166 பாரம்பரிய உணவு வகைகளை தயார் செய்து பார்வைக்காக வைத்திருந்தனர். இந்த பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவம் குறித்தும், அதில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் குறித்தும் விளக்கி கூறினர். இதில் கொள்ளு ரசம், கேழ்வரகு கொழுக்கட்டை, கம்பு பொங்கல், காராமணி சுண்டல், பச்சை பயிர் வடை, குதிரை வாலி பிரியாணி போன்ற சிறுதானிய உணவுகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
விழாவில் பெஸ்ட் கல்லூரியின் நிறுவன இயக்குனர் ராமன், கல்லூரி முதல்வர் குமார், மயிலாடுதுறை ரோட்டரி சங்க தலைவர் ஜனார்த்தனன், ஜேசிஐ மயிலாடுதுறை சங்க தலைவர் சரவணன், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.
நாகரிகம் என்ற பேரில் உடலுக்கு தீங்கு தரும் உணவுகளை உட் கொள்ளாமல் தவிர்க்கும் நோக்கத்தில் பாரம்பரிய உணவு திருவிழாவை நடத்தியதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
“உணவே மருந்து இதை கடைபிடிக்காத போது மருந்தே உணவு“ என்பது சித்தர் வாக்கு. அன்றைக்கு நமது முன்னோர்கள் உண்ட ஊட்டச்சத்து மிக்க உணவுதான் இன்றைக்கும் அவர்கள் ஆரோக்கியத்திற்கு காரணமாக விளங்குகிறது. இன்றைக்கு உள்ள இளம் தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். இதற்கு காரணம் மாறிவரும் உணவு பழக்கம் தான். நமது உடலை பாதுகாக்க மீண்டும் பழைய உணவு முறைக்கு மாறவேண்டும். அதற்கான முன்னெடுப்பை மேற்கொண்ட பெஸ்ட் கல்லூரி, மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் மற்றும் ஜேசிஐ மயிலாடுதுறை சங்கத்திற்கு மயிலை குரு இணையதளத்தின் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.