மயிலாடுதுறையில் பாரம்பரிய உணவுத் திருவிழா: வித விதமான உணவு வகைகளை தயாரித்து அசத்திய கல்லூரி மாணவிகள்

பாரம்பரிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாகை மாவட்டம் – மயிலாடுதுறை அருகே உள்ள மல்லியத்தில், பெஸ்ட் கல்வியியல் கல்லூரி, மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் மற்றும் ஜேசிஸ் சங்கம் இணைந்து நடத்திய பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெற்றது.

விழாவிற்கு பெஸ்ட் கல்வியியல் கல்லூரி நிர்வாக அலுவலர் ராமன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் குமார், மயிலாடுதுறை ரோட்டரி சங்க தலைவர் ஜனார்த்தனன், ஜேசீஸ் சங்க தலைவர் சரவணன், ஏ.ஜி.ஆர்.ஏ.கல்வியியல் கல்லூரி தலைவர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி உதவி பேராசிரியர் லெட்சுமி வரவேற்புரையாற்றினார்.

இயந்திரமயமாகி விட்ட இன்றைய வாழ்க்கை முறையில் பாரம்பரிய உணவுகளில் உள்ள நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் புதிய முயற்சியாக நடைபெற்ற உணவு திருவிழாவில் கம்பு, கேழ்வரகு, உளுந்து, பயறு, சிவப்பு அரிசி, கோதுமை, கீரை வகைகள், காய்கறி வகைகள், காராமணி, திணை, சோளம், ராகி, கொள்ளுபோன்ற சிறுதானியங்கள் மற்றும் நவ தானியங்களைக் கொண்டு 150-க்கும் மேற்பட்ட விதவிதமான பாரம்பரிய உணவு வகைகளை மாணவிகள் தயாரித்து காட்சிக்கு வைத்திருந்தனர். மேலும், இந்த உணவுத்திருவிழாவில் இனிப்பு வகைகள் தயார் செய்வது எப்படி என்பது குறித்து நிபுணர்களால் நேரடி செயல்முறை விளக்க நிகழ்வும் நடைபெற்றது.

உணவுத் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளரும், பெஸ்ட் கல்வியியல் கல்லூரியின் நிர்வாக அலுவலருமான இராமன் கூறுகையில், நாம் மறந்து போன பழைய உணவு முறைகள் திரும்பவும் வந்து கொண்டிருக்கிறது. உடல் உபாதைகள் பிரச்சனைகளினால் இன்றைக்கு எல்லோரும் பாரம்பரிய உணவான சிறுதானியம் மற்றும் காய்கனிகள், கீரை வகைகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். எமது மாணவிகள் வித விதமான பாரம்பரிய உணவு முறையான சிறுதானிய வகைகளை பயன்படுத்தி செய்துள்ளார்கள். நாம் மறந்து போன பழைய உணவு முறைகளை திரும்பவும் நினைவூட்டும் விதமாகவும், மாணவர்களுக்கு நம் முன்னோர்களது உணவு பழக்க வழக்கங்கள் முறையை நினைவுப்படுத்தியுள்ளது.

மாணவர்களின் வீடுகளில் உள்ள தாத்தா, பாட்டி அனைவரும் எங்கள் காலத்தில் நாங்க பார்த்த உணவு முறைகளை திரும்பவும் இன்று நாங்கள் பார்க்கிறோம் என்று கூறியுள்ளதை நினைக்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த உணவுமுறை ஆரோக்கியமாகவும் உடல் உபாதைகளை நீக்கக்கூடியதாகவும், தற்போது உள்ள சூழல்களில் நாம் முன்கூட்டியே எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வாகவும் இருப்பதற்கு இந்த உணவு முறைகள் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் ஒவ்வொருவரும் தானியங்களை கொண்டு 10 முதல் 20 வகையான உணவு வகைகைளை தயாரித்துள்ளனர். ஒவ்வொரு சிறு தானியங்களிலிருந்து எத்தனை வகையான உணவுகள் தயாரிக்கலாம் என்று. விளக்கங்களும்அளித்தனர். இதேபோன்று ஒவ்வொரு ஊர்களிலும், கல்லூரிகளிலும் இந்த பாரம்பரியமான உணவு வகைகளை பயன்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

உணவுத்திருவிழாவில் கலந்து கொண்ட கல்லூரி மாணவி பிரீத்தி கூறுகையில், தமிழ்நாடு இந்த உலகிற்கு தனியாக தெரிவதற்கு காரணம் நமது பாரம்பரியமும் பண்பாடும் தான் முக்கிய காரணம். அதன் அடிப்படையில் தான் எமது கல்லூரியில் நடைபெற்ற உணவு திருவிழாவில் அனைத்து மாணவிகளும் முழு ஈடுபாட்டோடு பங்கேற்றுள்ளோம். நாங்கள் தயாரித்த உணவு வகைகள் எங்களுக்கே ஒரு புதிய அனுபவமாக இருந்தது. இந்த உணவை உண்ணும்போதும் சுவை கூடுதலாகவும் உடம்பிற்கு ஆரோக்கியமாகவும் இருக்கிறது. இந்த உணவின் அருமை பெருமைகளை அறிந்து நாங்களே செய்து நாங்களே உண்ணும் பொழுது தான் அதன் உண்மை நிலை புரிகிறது. நாங்கள் எல்லோரும் சரியான உணவு , சத்தான உணவு பாரம்பரிய உணவு முறைகளை வாரம் ஒரு முறையாவது சமைத்து சாப்பிடுவோம் என தெரிவித்தார். தொடர்ந்து, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க பாரம்பரிய உணவு வகைகளை மீட்டெடுப்போம் என கல்லூரி மாணவிகள் உறுதியேற்றுக் கொண்டனர். சிறந்த பாரம்பரிய உணவு வகைகளை தயார் செய்த மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

புதிய முயற்சியாக பாரம்பரிய உணவின் பெருமைகளை உலகிற்கு பறைசாற்றும் வகையில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள், ரோட்டரி, ஜேசீஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டு இயற்கையான முறையில் தயார் செய்யப்பட்டிருந்த உணவு வகைகளை உண்டு மகிழ்ந்தனர். கல்லூரி உதவி பேராசிரியர் ரம்யா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பெஸ்ட் கல்வியியல் கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

“உணவே மருந்து இதை கடைபிடிக்காத போது மருந்தே உணவு“ என்பது சித்தர் வாக்கு. அன்றைக்கு நமது முன்னோர்கள் உண்ட ஊட்டச்சத்து மிக்க உணவுதான் இன்றைக்கும் அவர்கள் ஆரோக்கியத்திற்கு காரணமாக விளங்குகிறது. இன்றைக்கு உள்ள இளம் தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். இதற்கு காரணம் மாறிவரும் உணவு பழக்கம் தான். நமது உடலை பாதுகாக்க மீண்டும் பழைய உணவு முறைக்கு மாறவேண்டும். அதற்கான முன்னெடுப்பை மேற்கொண்ட பெஸ்ட் கல்வியியல் கல்லூரி, மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் மற்றும் மயிலாடுதுறை ஜேசீஸ் சங்கத்திற்கு மயிலை குரு இணையதளத்தின் நெஞ்சார்ந்த பாராட்டுகள்!

செய்தி : குணசீலன் / படங்கள் : யோகேஷ் & ராஜா யோகுதாஸ்

_____________________

மயிலை குருவின் இதர செய்திகள்

மயிலாடுதுறையில் மக்களை மிரட்டும் பாதாள சாக்கடை திட்டம்: நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?

உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி: உதவிக்காக கையேந்தும் சக மாணவர்கள் – உயிர் காக்க நீங்களும் உதவி கரம் நீட்டலாம்

உதயமாகிறது மயிலாடுதுறை மாவட்டம்? மக்கள் எழுச்சியால் அரசின் கவனத்தை ஈர்த்த பேரணி, ஆர்ப்பாட்டம். விரைவில் அறிவிப்பு வெளியாகும் : அமைச்சர், எம்.எல்.ஏ உறுதி

மயிலாடுதுறை பகுதிகளில் 24-09-19 (செவ்வாய்) அன்று மின்தடை

பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுச் சீருடை

Leave a Reply