20 ஆண்டுகளுக்குப் பிறகு வைத்தீஸ்வரன்கோயில் ஆலயக் குடமுழுக்குப் பணிகள் தொடக்கம்!- பக்தர்கள் மகிழ்ச்சி

ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு செய்ய வேண்டும். ஆனால், வைத்தீஸ்வரன் கோயில் ஆலயத்தில் அந்த விதி பின்பற்றப்படாமல் கடந்த 20 ஆண்டுகளாகக் குடமுழுக்கு நடைபெறாமல் இருந்தது.

நாகப்பட்டினம் மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயிலில் அமைந்துள்ளது வைத்தியநாதசுவாமி திருக்கோயில். நவகிரகங்களில் செவ்வாய்த் தலமாகக் கருதப்படும் இந்தக் கோயிலை தருமை ஆதீனம் நிர்வகித்துவருகிறது. இங்கு மூலவராக வைத்தியநாத சுவாமியும், தையல்நாயகி அம்மனும் அருள்பாலிக்கின்றனர்.

உலகில் பல்வேறு நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பல மாநிலங்களிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் இந்த ஆலயத்தின் குடமுழுக்கு 1998-ம் ஆண்டு செய்யப்பட்டது.

ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு செய்ய வேண்டும் என்பதைக் கருத்தில்கொள்ளாமல் 20 வருடங்களுக்கு மேலாகியும் திருப்பணி செய்யாததாலும் முறையாகப் பராமரிக்கப்படாததாலும் கோயிலின் மேற்கூரை பல இடங்களில் சிதலமடைந்தன. `நீராடினால் தீராத நோய் கூட தீர்ந்து விடும்’ என்று சொல்லப்படும் சித்தாமிர்த தீர்த்த குளம் அசுத்தமாகி நோய்களை உண்டாக்கும் அபாயமும் ஏற்பட்டது.

இதுகுறித்து விகடன் பல முறை செய்தி வெளியிட்டு, பக்தர்களின் சார்பாக தருமபுரம் ஆதீனத்துக்கும் இந்து – சமய  அறநிலையத்துறைக்கும் தெரியப்படுத்தியது. இந்த நிலையில், இன்று (12.9.19)  திருப்பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

தருமபுர ஆதீனத்தின் 26வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளிடம் எஜமான் அனுக்கை பெற்று, வைத்தீஸ்வரன் கோயில் ஆலயக் கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் பூர்வாங்க பூஜைகள் நேற்று  தொடங்கி இரவு முழுவதும் நடைபெற்றன.

இன்று காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தருமபுரம் ஆதீனத்தின் 26வது குருமகா சன்னிதானம், இளைய சன்னிதானம் முன்னிலையில் சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடத்தி குடமுழுக்கிற்கான திருப்பணியைத் தொடங்கினர்.

பூஜை செய்யப்பட்ட செங்கற்களைத் தருமபுரம் ஆதீனத்தின் 26 வது குருமாக சன்னிதானம், இளைய சன்னிதானம், வைத்தீஸ்வரன் கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், இந்து அறநிலையத்துறையினர், காவல்துறை ஆய்வாளர் சதீஷ் ஆகியோர் எடுத்துக்கொடுக்க முதற்கட்ட பணிகள் தொடங்கின.

பல ஆண்டுகளாக பக்தர்களின் கோரிக்கையாக முன் வைக்கப்பட்ட  இந்தக் குடமுழுக்குத் திருப்பணி தொடங்கியதால் பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். திருப்பணிகளை ஒரு வருட காலத்தில் முடித்து 2020-ல் குடமுழுக்கு செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு மாநிலச் செயலாளர் ராம நிரஞ்சன் கூறுகையில், “ஆலய நிதியிலிருந்தே திருப்பணிக்கான செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற இந்து – சமய அறநிலையத்துறையின் நிபந்தனையோடு அனுமதி பெற்றுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எந்தத் தொய்வும் இன்றிக் குடமுழுக்குப் பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதுதான் பக்தர்களின் விருப்பம்” என்றார்.

Leave a Reply