வன்னியர் உள் ஒதுக்கீடு: தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு !


வன்னியர் சமூகத்திற்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர் சமூகத்திற்கு 20 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென பாமக தொடர் போராட்டங்களை முன்னெடுத்தது. இதன் விளைவாக மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 20 சதவிகித இட ஒதுக்கீடு 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டது. அதில் பெரும்பகுதியாக வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடும், சீர் மரபினருக்கு 7 சதவிகிதமும், மீதமுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 2.5 சதவிகிதமும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
இதற்கான சட்ட முன்வடிவு பிப்ரவரி 26ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அப்போது சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு தற்காலிகமானதே என்றும், 6 மாதங்களுக்குப் பின் மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவித்தார். எனினும் வன்னியர் சமூகத்திற்கு உள் ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்த மற்ற சமுகத்தினர் தங்களுக்கும் அதுபோல இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தனர்.
இந்த நிலையில் 10.5 சதவிகித உள்ஒதுக்கீடுக்கு எதிராக மதுரையை சேர்ந்த அபிஷ் குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் வன்னியர் சமுகத்திற்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது மற்ற சமூகத்திற்கு பாதிப்பாக அமைந்துள்ளது. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில்தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும், ஆகவே, தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இவ்வழக்கு இன்று நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 10.5 சதவிகித இட ஒதுக்கீடு எதன் அடிப்படையில் அளிக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. உத்தேசத்தோடுதான் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பிற சமூகத்திற்கு அநீதி இழைப்பதால் இட ஒதுக்கீட்டிற்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டுமெனக் கோரினார்.
ஆனால் தடைவிதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்வு, இதுதொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
Source : News7 Tamil