6th December 2020

சொத்தை விற்று ஊர்ப்பஞ்சம் போக்கிய மயிலாடுதுறை மாமனிதம்!

இந்த ஊரில் அவருக்கு முன்னால் புகழ்வாய்ந்த எத்தனையோ பேர் வாழ்ந்திருக்கிறார்கள். அவரது காலத்திற்குப் பின்னாலும் எத்தனையோ பேர் வந்துவிட்டார்கள். ஆனால், அவரைப் போல அழகோடு யாருக்கும் அந்தப்பெயர் பொருந்திப்போகவில்லை. இத்தனைக்கும் அவருக்குச் சொந்த ஊர் திருச்சிக்குப் பக்கத்திலுள்ள குளத்தூர். அங்கிருந்து வேலைக்காகதான் இந்த ஊருக்கு வந்தார். எனினும் சொந்த ஊரைவிட வாழ்ந்த ஊரைத்தான் அதிகம் நேசித்தார். வாழ்வித்த ஊரின் மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும்; நன்மைகளைச் செய்ய வேண்டும் என உளமாற விரும்பினார். அப்படியே வாழ்ந்தும் காட்டினார். நீதி, இலக்கியம், நிர்வாகம் எனும் மூன்று துறைகளிலும் சாதித்ததோடு பெண்ணுரிமைக்காகவும் பேசிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்கிற அந்த அற்புத மனிதரைப் போல இந்த ஊர்ப் பெயர் இதுவரை யாருக்கும் கனக்கச்சிதமாக சேர்ந்திடவில்லை.

20 வயதிலேயே தமிழ, ஆங்கில மொழிகளில் புலமை பெற்ற வேதநாயகம் 1848 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தில் ஆவணக்காப்பாளர் பணியில் சேர்ந்தார். ‘சதர்ன் புரவிஷனல் கோர்ட்’ என்ற பெயரில் தென்னிந்தியாவின் உயர்நீதிமன்றமாக திகழ்ந்த அங்கேயே பின்னர் மொழிபெயர்ப்பாளர் வேலையும் அவருக்கு கிடைத்தது. 1856 ல் காலியான ஓரு உரிமையில் நீதிபதி பதவியிடத்திற்கு ஆங்கிலேய அரசு தேர்வு நடத்திய தேர்வில் வென்று, 1857 ஆம் ஆண்டு தரங்கம்பாடி முன்சீப் ஆக பதவியேற்றுக் கொண்டார். தரங்கம்பாடி உரிமையியல் நீதிபதியான வேதநாயகம் பிள்ளைதான் ஆங்கிலேயர் ஆட்சியில் நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியர். முதல் தமிழர். ஓராண்டுக்குப் பின்னர் அவர் சீர்காழிக்கு மாற்றப்பட்டார். 1860 ஆம் ஆண்டில் அப்போதைய மாயூரம் நகரத்தின் நீதிபதியாக பொறுப்பேற்றார்.

இங்கே வேதநாயகம் நீதியளிக்கும் விதம் மக்களைக் கவர்ந்தது. அவருக்கு முன்பிருந்தவர்கள் நினைத்த நேரத்திற்கு வந்து நினைத்தபடி எல்லாம் தீர்ப்பு வழங்கிக்கொண்டிருந்த இடத்தில் பொறுப்போடு வழக்குகளைக் கேட்டு நியாயம் வழங்கிய வேதநாயகரின் புகழ் பரவியது. நாள் தோறும் சரியான நேரத்திற்கு நீதிமன்றத்தில் இருந்தார். வழக்காடுவதற்கு வரும் அப்பாவி மக்களை வக்கீல்கள் கசக்கிப் பிழிவதைக் கண்டித்தார். “வழக்கின் தன்மையையும், தம்முடைய உழைப்பையும், கட்சிக்காரன் தகுதியையும் யோசித்து நியாயமான ஃபீசை வக்கீல் பெற வேண்டுமே அன்றி அதிகம் கேட்பது முறையல்ல. வழிச்செலவு, படிச்செலவு, வாய்தா தோறும் ஃபீசு என வழக்கு விசாரணையாகிற ஒவ்வொரு கட்டத்திலும் வக்கீலுக்குப் புதிது புதிதாக காணிக்கை கொடுத்து கட்சிக்காரன் பிச்சைக்காரன் ஆகின்றான். உதவிக்குப் பதிலாக அட்டை போல அவர்களை உறிஞ்சுகிறார்கள் சில வக்கீல்கள் – சில தேவதைகள் அடிக்கடி பலி கேட்பதைப்போல இவர்கள் ஃபீஸ் கேட்கிறார்களாம். இது தருமம் தானா?” என்று ஆதங்கத்தோடு கேட்டார்.

ஒரு நீதிபதியாக தான் நியாயம் தவறாமல் செயல்பட வேண்டுமென நீதிமன்றத்திற்குச் செல்லும் நாளில் எல்லாம் தனியாக ஆண்டவனிடம் வேண்டுதலே செய்தார். அதற்காக வழிபாட்டுப் பாடல் எழுதி அதைப் படித்துவிட்டே நீதிமன்றத்திற்குப் போவார். இப்படி பயபக்தியோடு நீதிபதி பதவியைக் கையாண்ட வேதநாயகம் பிள்ளையின் மீது மக்களுக்குப் பெரும் நம்பிக்கை பிறந்தது. அவரிடம் போனால் நீதி கிடைக்கும் என்று நினைத்தார்கள். இதற்காக சுற்றியிருக்கும் ஊர்களில் இருந்த வழக்குகளை மாயூரம் நீதிமன்றத்திற்கு மாற்றிக் கொள்ள பலர் ஆர்வம் காட்டினார்கள். நீதிபதி பதவியில் சிறந்து விளங்கியது மட்டுமல்ல; நீதித்துறையில் தமிழ் என்பதற்குத் தொடக்கப்புள்ளியாகவும் வேதநாயகர் விளங்கினார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டபோது சட்டங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டன. அப்போது, ‘சட்டங்கள் எல்லாம் அவர்கள் மொழியில் உருவாக்கப்பட்டால் எங்களுடைய மக்கள் எப்படி புரிந்து கொள்வார்கள்’ என்று நினைத்த வேதநாயகம் பிள்ளை, சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்களை முதன்முறையாக தமிழில் மொழிபெயர்த்தார். ஆங்கிலத்தில் உள்ள ஆவணங்களையும் சட்டச்சொற்களையும் தமிழ்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதி இல்லை என்று இப்போது கூட சாக்குபோக்கு சொல்பவர்களுக்கு அவர் அப்போதே பதிலும் சொல்லியிருக்கிறார்:

“இங்கிலீஷ் வார்த்தைகளுக்குச் சரியான பிரதிபதங்கள் தமிழில் இல்லையென்று வக்கீல்கள் சொல்வது அவர்களது தெரியாமையே அல்லாமல் உண்மையல்ல. தமிழ்நூல்களைத் தக்கபடி அவர்கள் ஆராய்ந்தால், பிரதிபதங்கள் அகப்படுவது பிரயாசமா?” இப்படி கேட்டதோடு மட்டுமில்லை; தாமே முன்னோடியாக இருந்து நீதி, நிர்வாகம் தொடர்பான சட்டங்களை, ‘சித்தாந்த சங்கிரகம்’ என்ற தமிழ்நூலாக 1862 ல் வெளியிட்டனர். அதாவது சென்னை உட்பட மூன்று இடங்களில் உயர்நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்ட அதே ஆண்டில் முக்கியமான சட்டங்களை மக்களும் வக்கீல்களும் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ்படுத்தி காட்டினார் வேதநாயகம் பிள்ளை. அதோடு அவர் விடவில்லை. ‘தமிநாட்டு நீதிமன்றங்களில் தமிழ் ஆட்சி மொழியாக இருப்பதே சரி’ என்று அழுத்தத்திருத்தமாக நம்பினார். ? ‘மனுதாரரும் தமிழ் பேசுபவர். எதிர்த்து வழக்காடுபவரின் மொழியும் தமிழ்தான். வக்கீலும் தமிழர். பிறகு எதற்காக நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில் பேச வேண்டும்? என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே வழக்கில் தொடர்புடையவர்களை வைத்திருப்பது நியாயமா?’ என்று 150 ஆண்டுகளுக்கு முன்பே உரக்க கேட்ட தீர்க்கதரிசி வேதநாயகர்.

1850 முதல் 1861 வரை வெளியான நீதிமன்றத்தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இவற்றோடு ‘நீதிநூல்’ என்றொரு தொகுப்பையும் எழுதினார். ஆட்சி நிர்வாகம், அலுவலக நடைமுறை, நீதி பரிபாலனம் போன்றவை எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று சொல்லும் புத்தகம் அது. ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்பே அவர் செய்த இப்பணிகள் சாதாரணமானவை அல்ல. தமிழ்நாட்டு நீதித்துறை வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படத்தக்கவை. நீதிதுறையில் வேதநாயகருக்குப் புகழ் பரவிய பொறுக்க முடியாத நெல்சன் எனும் வெள்ளைக்கார உயர் நீதிபதியின் வெறுப்பு அவரது பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது. ‘வேறு ஊருக்கு மாற்றலாகிப் போகிறீர்களா? அல்லது மாதம் நூறு ரூபாய் ஓய்வூதியத்துடன் ஓய்வு பெற்றுக் கொள்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். உடல் நலம், மனசுக்குப் பிடித்த மாயூரத்தை விட்டு போக விரும்பாமை போன்ற காரணங்களால் நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டர். ஓய்வுக்குப் பிறகும் இதே ஊரிலேயே வேதநாயகம் வாழ்ந்தார்.

ஆந்திரா, மலபார் உட்பட பழைய மெட்ராஸ் மாகாணத்தில் வெள்ளைக்காரர்களால் முதன்முறையாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளில் ஒன்றான மாயூரம் நகர்மன்றத்தின் தலைவராக வேதநாயகம் பிள்ளை தேர்ந்தெடுக்கப்பட்டார். நீதிபதியாக மக்கள் போற்றும் அளவுக்கு பணியாற்றிய அவர் ஊரின் தலைவர் பதவியிலும் சிறப்புற திகழ்ந்தார். நடைபாதைகளையும் சாலைகளையும் உருவாக்கினார். பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக்க தனி ஆதரவற்றோர் விடுதிகளை ஏற்படுத்தினார். மருத்துவ வசதிக்காக நகராட்சியின் சார்பில் இலவச வைத்திய சாலைகளை ஆரம்பித்தார். கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அதிலும் பெண் கல்வயின் மீது கூடுதல் அக்கறை காட்டிய வேதநாயகர், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக பெண்களுக்கு என தனி பாடசாலையைத் தொடங்கினார். இளைஞ்ர்களுக்கும் மாணவர்களுக்கும் வசதியாக சிலம்பாட்டக்கூடங்களையும் உடற்பயிற்சி மன்றங்களையும் அமைத்து தந்தார். பிறந்த ஊர் வேறாக இருந்தாலும் மாயூரம் என்பதைத் தன்பெயரோடு சேர்த்துக்கொண்டது மட்டுமின்றி, அந்த ஊரை உளப்பூர்வமாக நேசித்தார். 1876 ல் ஏற்பட்ட தாது வருச பஞ்சத்தின் போது தம் சொத்துகளை விற்று மக்களின் பசியைப் போக்கியதே மாயூரம் மண்ணின் மீதும் மக்களின் மீதுமான வேதநாயகரின் அளப்பரிய அன்புக்குச் சான்று. இதற்காக ‘நீயே புருஷ மேரு’ என்று தொடங்கும் தனி கீர்த்தனை பாடி வேதநாயகரைப் பாராட்டியிருக்கிறார் ‘நந்தனார் சரித்திரம்’ எழுதிய கோபாலகிருஷ்ண பாரதி.

இன்னொரு பக்கம் தமிழிலக்கியத்திற்குப் பெரிய பங்களிப்புகளையும் வேதநாயகம் வழங்கியிருக்கிறார். சிறுவயது முதலே கவிதைகள் எழுதிய அவரது முறையான இலக்கியப்பணி சீர்காழியில் நீதிபதியாக இருந்த போது தொடங்கியது. மாயூரத்திற்குச் சென்ற பிறகு நிறைய எழுதி குவித்தார். தமிழின் முதல் நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்ற நூலை 1879 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டார். ‘சுகுணசுந்தரி’ எனும் இரண்டாவது நாவல் 1887ல் வெளிவந்தது. 150 ஆண்டுகளுக்கு முன்பே (1869) ‘பெண் கல்வி’ என்ற சொல்லை உருவாக்கியதோடு, அதே பெயரில் புத்தகம் ஒன்றையும் எழுதினார். நூல்கள் போக ஏராளமான தனிப்பாடல்களையும் எழுதித் தள்ளினார். அப்போது மக்களிடம் விடுதலை வேட்கை பெரிதாக உருவாகவில்லை; காங்கிரஸ் கட்சியும் தொடங்கப்படவில்லை. அத்தகைய சூழலில் ஆங்கிலேயர் ஆட்சியின் அவலங்களை, மலிந்து கிடந்த ஊழல்களை பாடல்கள் வழியாக தோலுரித்துக் காட்டினார்.

‘தமிழ் புதினத்தின் தந்தை’, ‘சட்டத்தமிழின் தந்தை’ என்றெல்லாம் அழைக்கப்படும் மாயூரம் வேதநாயகம் பிள்ளையைத் தமிழகம் சரியாக கொண்டாடவில்லை. அவரது நினைவைப் போற்றும் வகையில் எதையும் நாம் செய்யவில்லை. வேதநாயகர் வாழ்ந்த ஊரான மயிலாடுதுறையில் கூட அவருக்கென்று ஒரு மணிமண்டபமோ, நினைவு இல்லமோ கிடையாது. மணிக்கூண்டுக்குப் பக்கத்தில் அவர் வாழ்ந்ததாக சொல்லப்படும் இடத்தில இப்போது துணிக்கடை இருக்கிறது. அவரது நினைவைப் போற்ற ஒரே ஒரு மார்பளவு சிலை செய்து அதையும் பல இடங்களில் மாற்றி, மாற்றி வைத்து பந்தாடி கடைசியில் செயின்ட்பால்ஸ் மகளிர் பள்ளிக்கு எதிரே கல்லறைத் தோட்டத்திற்குள் நிறுத்திவிட்டோம். எவ்வளவு நன்றியோடு இருக்கிறோம் பார்த்தீர்களா? வேதநாயகர் பணியாற்றிய மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் அவருக்கோர் ஆளுயர சிலை வைத்துக் கொண்டாட முடியவில்லை. சொல்லப்போனால் வேதநாயகர் ஆற்றியிருக்கும் பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றத்திலேயே அவருக்குச் சிலை வைக்க வேண்டும். அவர் மிகவும் நேசித்த மண்ணில்கூட அதனைச் செய்யவில்லை நாம். அரசு ஆண்டுக்கொரு விழா எடுத்து அவர் பெருமை பாடுவதில்லை. ஆனாலும் தன் சொத்தை விற்று நம் தாத்தா, பாட்டிகளைப் பஞ்சத்தில் இருந்து பாதுகாத்த அந்த கருணை உள்ளத்தின் நேசம், வாழும் ஊரை நேசிக்கும் மாண்பையும், உள்ளார்ந்த உணர்வோடு அந்த ஊருக்கு நல்லது செய்வது எப்படி என்பதையும் இன்னும் சொல்லிக்கொண்டே இருக்கிறது…

குறிப்பு : கோமல் அன்பரசன் எழுதிய தமிழ்நாடு நீதிமான்கள் புத்தகத்தில் இருந்து

தமிழ்நாடு நீதிமான்கள்

 

2 thoughts on “சொத்தை விற்று ஊர்ப்பஞ்சம் போக்கிய மயிலாடுதுறை மாமனிதம்!

Leave a Reply