டீசல் விலையை குறைக்க ஒன்றிய அரசுக்கு 21 நாட்கள் கெடு;3 வாரங்களுக்குள் குறைக்காவிட்டால் வேலை நிறுத்தம்: தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!



சென்னை: டீசல் விலையை 3 வாரங்களுக்குள் குறைக்காவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தென்னந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகின்றன. தமிழகத்தில் டீசல் விலை லிட்டர் 100 ரூபாயை கடந்து விற்பனை ஆகி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக பல்வேறு இடங்களுக்கு சரக்குகளை ஏற்றி செல்லும் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 4,50,000 லாரிகள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு கம்பி, சிமெண்ட், உணவு பொருட்கள் உள்ளிட்டவை அனுப்பப்படுகின்றனர். நாள்தோறும் பல நூறு கிலோ மீட்டர் நடந்து வரும் லாரி போக்குவரத்து தற்போது டீசல் விலை உயர்வால் நலிவை சந்தித்து வருகிறது. இதுமட்டுமில்லாமல் 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்களை புதுப்பிப்பதற்கான பதிவு கட்டணத்தை 850 ரூபாயில் இருந்து அதிரடியாக 13,500ஆக உயர்த்தப்பட்டு உள்ளதால் வாடகை கட்டணத்தை நிர்ணயிக்க முடியவில்லை என லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் அதிகரிப்பு, ஆகிய ஒன்றிய அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகளை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ள லாரி உரிமையாளர்கள் டீசல் விலையை குறைக்க ஒன்றிய அரசுக்கு 21 நாட்கள் கெடு விதித்துள்ளனர்.
Advertisement