3rd December 2021

புதை சாக்கடை பிரச்சனைக்கு தீர்வு காண கோரி நடைப்பயணம்

மயிலாடுதுறை நகராட்சியில் தொடரும் புதை சாக்கடை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்கள்கிழமை நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.

மயிலாடுதுறை நகராட்சியில் செயல்பட்டு வரும் புதை சாக்கடைத் திட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக சுகாதார சீர்கேடு, போக்குவரத்து இடையூறு போன்ற பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதை சரி செய்யாத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மயிலாடுதுறையில் நடைப்பயணம் நடைபெற்றது.

ரயிலடி பகுதியில் தொடங்கிய நடைபயணத்தை கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.சீனிவாசன் தொடங்கி வைத்தார். நடைப்பயணம் முக்கிய சாலைகள் வழியாக சென்று நகராட்சி அலுவலகம் அருகில் நிறைவடைந்தது. மாவட்ட செயலாளர் நாகை மாலி நடைப்பயணத்தை முடித்து வைத்து கண்டன உரையாற்றினார். இதில் மாவட்டக் குழு உறுப்பினர் டி.கணேசன், மாவட்ட செயற்குழு பி. மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You cannot copy content of this page