3rd December 2021

ஆக்கூர் முக்கூட்டு சந்திப்பில் ரவுண்டானா அமைக்கப்படுமா?

பொறையாறு அருகே உள்ள ஆக்கூர் முக்கூட்டு நான்கு வழிச்சாலை சந்திப்பில் ரவுண்டானா அமைக்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

விழுப்புரம் -நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை ஆக்கூர் முக்கூட்டு  சாலையில் சின்னங்குடி, மயிலாடுதுறை,  தரங்கம்பாடி,  சீர்காழி  ஆகிய சாலைகளை இணைக்கும் நான்கு வழிச்சாலை உள்ளது.  இப்பகுதி சாலையில் அதிகளவில் வாகனங்கள் கடந்து செல்வதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகின்றன.  இதேபோல்,  நாகப்பட்டினம்-சென்னை செல்லும் வாகனங்கள் அதிவேகமாக இப்பகுதியை கடந்து செல்வதாலும் விபத்துகள் நேரிடுகின்றன.  குறுகலான வளைவு பகுதியில்,  சாலையின் இருபுறங்களிலும் சாலையோர கடைகளில் பேருந்துகள் நிறுத்தும்போது அப்பகுதியில், போக்குவரத்துக்கு  இடையூறு ஏற்பட்டு அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

மேலும்,  தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அதிவேகமாக  அப்பகுதியை கடந்து செல்வதாலும்  விபத்துகள் ஏற்படுகின்றன.  விழுப்புரம்-நாகப்பட்டினம் வரை கடந்த பல ஆண்டுகளாக நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி விரைந்து முடிக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் ஆக்கூர் முக்கூட்டு நான்கு வழிச்சாலை சந்திப்பில் ரவுண்டானா அமைக்க முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  இந்த நான்கு வழி சாலை வழியாக வயதானவர்கள் பள்ளி,  கல்லூரி மாணவர்கள்  மிகவும் அச்சத்துடன் சாலையை கடக்கின்றனர்.

மேலும் இச்சாலை வழியாக கனரக வாகனங்கள்,  வெளியூர் செல்லும் விரைவு பேருந்துகள்,  மீன் ஏற்றிச் செல்லும் வேன்கள் அதிக அளவில் செல்வதால் அவ்வப்போது பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.  எனவே,  விபத்துகள் ஏற்படாதவாறு ஆக்கூர் முக்கூட்டு நான்கு வழிச்சாலையில் உடனடியாக ரவுண்டானா அமைக்க வேண்டும் என இப்போதே என்பதே இப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Leave a Reply

You cannot copy content of this page