8th December 2021

ஊருக்கே தீபாவளிப் புத்தாடைகள் வழங்கி மகிழ்ந்த எம்.எல்.ஏ. குடும்பம்!

நாகை மாவட்டம், குத்தாலத்தை அடுத்த பழைய கூடலூரில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராஜமாணிக்கம் நினைவாக அவருடைய மணிமண்டபத்தில் கிராம மக்களுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் இராஜமாணிக்கம் அறக்கட்டளை மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டு நிதியுதவி, தீபாவளி, பொங்கல் பண்டிகைக் காலங்களில் கிராம மக்களுக்கு புத்தாடைகள் வழங்குதல் போன்ற பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பழைய கூடலூரில் நடைபெற்ற புத்தாடைகள் வழங்கும் விழாவில் அறக்கட்டளை நிர்வாகிகள் கம்சலை அம்மாள், அருண்பிரியா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் செல்வம், ராஜ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாக இயக்குனர் பாண்டியன், ஓய்வு பெற்ற அரசு அதிகாரி இராஜேந்திரன், தலைமையாசிரியர் மதிவாணன்,  சுதா அண்ணாதுரை, மருத்துவர் அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மக்களுக்கு புத்தாடைகளை வழங்கினர்.

வாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைப்பிடித்து, எளிமையாக வாழ்ந்து மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டப் பணிகளை செய்து மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராஜமாணிக்கத்தின் வழிநின்று, அவரைப் போலவே அவரது குடும்பத்தினரும் தங்கள் ஊரையும், ஊர் மக்களையும் நேசித்து எண்ணற்ற உதவிகளை தொடர்ந்து செய்து வருவதாக பெருமிதம் தெரிவித்தனர் பழையகூடலூர் கிராம மக்கள்!

“மகிழ்வித்து மகிழ்தல் மாண்பு” என்ற வரிகளுக்கு உகந்தவர்களாய் வாழ்ந்து, வாழ்வித்து வரும் எம்.எல்.ஏ. இராஜமாணிக்கத்தின் குடும்பத்தை வாழ்த்துகிறது மயிலைகுரு.

Leave a Reply

You may have missed

You cannot copy content of this page