சிமெண்டு சாலை அமைக்கும் பணி!!



மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் தெற்கு வீதியில் சிெமண்டு சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முருகண்ணன் ஆய்வு செய்தார்.மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் வீதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி, கடந்த சில மாதங்களுக்கு முன் திருவெண்காடு வந்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் கோரிக்கை மனுவை அளித்தார். அதனை தொடர்ந்து தெற்கு வீதி, மேலவீதி ஆகியவற்றில் சிமெண்டு சாலைகள், மழைநீர் வடிகால் வசதி, நான்கு கோவில் மடவளாகத்திலும் பேவர் பிளாக் சிமெண்டு சாலை மற்றும் உயர்மின் கோபுர விளக்கு அமைத்திட ரூ. 3.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.
இதையடுத்து தெற்கு வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை நேற்று மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முருகண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விரைந்து பணிகளை முடிக்க கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது ஒன்றியக்குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) அருள்மொழி, ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், ஒன்றிய பொறியாளர்கள் கலையரசன், சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
சீர்காழி ஊராட்சி ஒன்றியம் வானகிரி ஊராட்சிக்கு உட்பட்ட மீனவர் கிராமத்தில் மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் சாலை அமைக்க ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், சீர்காழி ஒன்றியத்துக்கு உட்பட்ட 37 ஊராட்சிகளில் பிரதமர் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்கு ஆணைகள் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார். ஆய்வின்போது ஒன்றிய பொறியாளர் கலையரசன், பணி மேற்பார்வையாளர் ஓசைநாயகி, ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன், ஊராட்சி செயலாளர் செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.