ஸ்ரீரங்கத்தில் சித்திரை திருவிழா…ரங்கா முழக்கத்துடன் கோலாகல கொடியேற்றம் – 29ல் தேரோட்ட வைபவம்!



திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் திருவிழா நேற்று கொடியேற்ற வைபவத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரைத் தேரோட்ட நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறும். மே 1ஆம் தேதியன்று ஆளும்பல்லக்குடன் விழா நிறைவடைகிறது.
வைணவ பக்தர்களால் பூலோக வைகுண்டம் என்று பூஜிக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 திருப்பதிகளில் முதன்மைத் தலமாகவும் பஞ்சரங்கத்தலங்களில் ஒன்றாகவும் வைத்து போற்றப்படும் முக்கிய ஆலயமாகும்.
அதைத் தொடர்ந்து, நம்பெருமாள் கொடி படத்திற்கு கோயில் பட்டர் சுவாமிகள் மற்றும் அர்ச்சகர்களால் பூஜைகள் செய்யப்பட்டு, மீன லக்னத்தில் அதிகாலை 4:30 மணி முதல் 5:05 மணிக்கு மேளதாளம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது, அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் ரங்கா…. ரங்கா… என பக்திப் பரவசத்துடன் வணங்கி வழிபட்டனர். இதையடுத்து, நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை அடைந்தார்.
மாலை 6:30 மணியளவில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் சித்திரை வீதிகளில் திருவீதியுலா வந்து இரவு 8:30 மணியளவில் சந்தன மண்டபத்தை அடைந்தார். பின்னர் இரவு 9 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு யாகசாலையை அடைந்தார். திருவிழா நடைபெறும் நாட்களில், நம்பெருமாள் தினமும் காலை, மாலை என இருவேளையும் திருவீதியுலா வைபவம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.