3rd December 2021

கொரோனா 144 தடை : மயிலாடுதுறையில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முழுவீச்சில் மேற்கொண்டு வரும் நிலையில், இதன் தொடர்ச்சியாக 22 மார்ச் ஒரு நாள் சுய ஊரடங்கு பிறப்பித்த நிலையில் அதை 23 மார்ச் காலை 5 மணி வரை நீடித்தது. இதற்கான பொது மக்களின் ஆதரவும் சிறப்பாகவே அமைந்திருந்தது. இந்நிலையில் தியாக உள்ளதோடு தன் உயிரையும் பொருட்படுத்தாது செயல்பட்டுக்கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் வண்ணம் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலிருந்து கர ஓசை எழுப்பி தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

தொடர்ந்து உலக நாடுகளின் மத்தியில் கொரோனா நோயினால் மேலும் உயிரிழப்புகளும், சமுதாய தொற்றுகளும் உயர்ந்த காரணத்தால் தமிழக அரசு மாநிலம் முழுதும் 24 மார்ச் மாலை 6 மணி முதல் 31 மார்ச் வரை 144 தடை உத்தரவை பிறப்பித்தது. இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் நேற்று மாலை மயிலாடுதுறை மருத்துவமனையை நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்.

இந்நிலையில் மயிலாடுதுறை மக்கள் நேற்று மாலை முதலே தங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகளை போன்ற அத்தியாவசிய பொருட்களை நீண்ட நேரம் காத்திருந்து வாங்கி சென்றனர். ஒரே நேரத்தில் மக்கள் அனைவரும் நகரின் முக்கிய கடை வீதிகளில் கூடியதால் மயிலாடுதுறை நகரமே கூட்ட நெரிசலுடன் காணப்பட்டது. மேலும் அனைத்து முக்கிய சாலைகளும் போக்குவரத்து நெரிசலுடன் இருந்தது. நமது மயிலாடுதுறையின் காவலர்கள் மிக கவனத்துடன் போக்குவரத்தை சரி செய்து கொடுத்தனர்.

கொரோனா நோய் தொற்று மிக தீவிரமாக பரவி வரும் இந்நிலையில் வளர்ந்த நாடுகளே இதில் மிகப்பெரும் உயிரிழப்புகளை கண்டுள்ள நிலையில் நமது மத்திய மற்றும் மாநில அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை கருத்தில் கொண்டு இந்த ஊரடங்கு உத்தரவினை மதித்து ஏற்று பின்பற்றினோமானால் நிச்சயமாக தொற்றினை கட்டுப்படுத்த முடியும் என்பது மட்டுமே உண்மை.

செய்தி: குணசீலன்
படங்கள்: யோகேஷ்

Leave a Reply

You cannot copy content of this page