உர விற்பனையாளர்களுக்கு வேளாண் துறை எச்சரிக்கை



மானிய உரங்கள் விற்பனையில் இதர இடுபொருட்களை வலுக்கட்டாயமாக விற்பனை செய்யும் உரக்கடைகளின் உரிமங்கள் இரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பயிர் சாகுபடிக்குத் தேவைப்படும் மானிய உரங்களான யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு சில்லறை உர விற்பனையாளர்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே மானிய உரங்களை விற்கும் சமயம், சில உர விற்பனையாளர்கள் விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக இதர இடுபொருட்களையும், வாங்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தி விற்பனை செய்கின்றனர் என புகார் எழுந்தது.
இதுதொடர்பாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், உர விற்பனையாளர்கள் விவசாயிகள் கேட்கும் மானிய உரங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இதர இடுபொருட்களை விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது. இத்தகைய விற்பனை, உரக்கட்டுப்பாட்டு ஆணை, 1985 –ற்கு புறம்பான செயலாகும் என்று தெரிவித்துள்ளது.
விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக இதர இடுபொருட்களை வலுக்கட்டாயமாக விற்பனை செய்யும் உர விற்பனையாளர்களின் விற்பனை உரிமங்கள் இரத்து செய்யப்படும் என எச்சரித்த வேளாண் துறை, “இதுகுறித்த புகார்களை மாநில உர உதவி மைய கைப்பேசி எண். 93634 40360 மற்றும் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநரிடம் தெரிவிக்கலாம்” எனவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.