அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வேலி அமைத்து விவசாயிகள் முற்றுகை!



செம்பனார்கோவில் அருகே அன்னவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட கழனிவாசல் கிராமத்தில் அய்யனார் கோவில் அருகே கடந்த 9 ஆண்டுகளாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு அன்னவாசல், கழனிவாசல், அகரஅன்னவாசல், வடகரை, மாந்தை, வாடக்குடி, மாங்குடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 980-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விளைவிக்கப்பட நெல்லை விவசாயிகள் விற்பனை செய்து பயன்பெற்று வந்தனர்.
தற்போது சம்பா அறுவடை பணிகள் தொடங்கி உள்ள நிலையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை இடம் மாற்றம் செய்து மாங்குடி கிராமத்தில் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
கொள்முதல் நிலையம் இடம் மாற்றம் செய்யப்பட்டதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே இயங்கி வந்த இடத்திலேயே கொள்முதல் செயல்பட வலியுறுத்தி மாங்குடியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வேலி அமைத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் சின்னதுரை, விவசாய சங்கத் தலைவர் சாமியப்பன், செயலாளர் முருகன், விவசாய சங்கத்தை சேர்ந்த இளையராஜா, கணேசன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
கழனிவாசலில் கடந்த 9 ஆண்டுகளாக இயங்கி வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் கிராமங்களின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால் போக்குவரத்துக்கு எளிதாகவும், அங்கு போதுமான மின்வசதி, பாதுகாப்பு வசதி போன்ற வசதிகள் இருப்பதால் சிரமமின்றி நெல்லை விற்பனை செய்து பயனடைந்து வந்தோம். தற்போது மாங்குடியில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையம் போக்குவரத்துக்கு சிரமமாக இருப்பதோடு ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் உள்ளது.
மேலும் அங்கு போதுமான மின் வசதியும் கிடையாது. இதனால் இரவு நேரங்களில் பெண் விவசாயிகள், இங்கு வந்து நெல்லை விற்பனை செய்ய முடியாது. இங்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால் எங்களது நெல்லுக்கு உரிய பாதுகாப்பும் இருக்காது. இதனால் பழைய இடத்திலேயே நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு அளித்துள்ளோம். ஆனாலும் புதிய இடத்திலேயே நேரடி கொள்முதல் நிலையம் இயங்க எந்திரம், சாக்கு உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கொள்முதல் நிலையம் வேறு இடத்தில் இயங்குவது மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என விவசாயிகள் கூறினர்.