மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்திற்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் மனு!



மயிலாடுதுறை நகருக்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றாகும். இந்நிலையில் மயிலாடுதுறை நகரம் புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசாணை வெளியாகி அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறை நகருக்கான புதிய பேருந்து நிலையம் அமைக்க தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இடம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான அந்த இடத்தை பயன்படுத்திய விவசாயிகள் இழப்பீடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மயிலாடுதுறை அருகே மணக்குடி ஊராட்சி கருங்குயில்நாதன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரெங்கநாதன் மற்றும் கிராம மக்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில், மயிலாடுதுறை அருகே மணக்குடி ஊராட்சி கருங்குயில்நாதன் பேட்டை கிராமத்தில் மயிலாடுதுறை நகரத்திற்கான புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசு நிலம் கையகப்படுத்தியுள்ளது.
தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான அந்த நிலத்தில் 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வருகிறோம். பல ஆண்டுகளாக அனுபவித்து வந்த எங்களது நிலங்களை மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் எந்தவித முன்னறிவிப்புமின்றி புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டே கையகப்படுத்தப்பட்ட நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. அப்போது அந்த பணியை தடுத்து, உரிய இழப்பீடு அல்லது மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கேட்டோம். அதற்கான நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டு வருகிறது. எனவே கிராம மக்கள் பல தலைமுறைகளாக அனுபவித்து வந்த நிலத்தை கையகப்படுத்தி புதிய பேருந்து நிலையம் அமைக்கும் இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு அல்லது மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.