சிதம்பரம் அருகே அரசுப் பேருந்தின் டயர் வெடித்து விபத்து: 3 பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் காயம்!



சிதம்பரம் அருகே அரசுப் பேருந்தின் டயர் வெடித்ததில் 3 பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர். சிதம்பரம் அருகே உள்ள வக்ராமலை கிராமப்பகுதி பேருந்து நிலையம் அருகே காட்டுமன்னார்கோவிலில் இருந்து கிராமப்புற சாலை வழியாக சிதம்பரம் நோக்கி வந்த தடம் எண் 22 என்ற அரசு பேருந்தை சங்கர் என்பவர் இயக்கி வந்தார். அப்பொழுது எதிர்பாராவிதமாக பின்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் பேருந்தின் உள்புற பலகை உடைந்ததில், 3 பள்ளி மாணவர்கள் மற்றும் ஒரு முதியவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் காயமடைந்த முதியவர், பின்பக்க டயரின் மேற்புறமுள்ள இருக்கையில் அமர்ந்திருந்ததால் பலத்த காயமடைந்தார்.
மேலும் ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த முதியவர் மற்றும் மாணவர்களை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, இப்பகுதியில் இயக்கப்படும் பேருந்துகளின் டயர்கள் தரமற்ற முறையில் இருப்பதால் விபத்துகள் ஏற்படுவதாகவும், எனவே போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தரமான டயர்களை பேருந்துகளில் பொறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.