8th December 2021

மயிலாடுதுறை கடை முழுக்கு திருவிழாவிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க கோரி மனு

மயிலாடுதுறை கடை முழுக்கு பெருவிழாவிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க கோரி தஞ்சை சரக காவல்துறைத் தலைமை இயக்குனர் லோகநாதன் அவர்களிடம் மயிலாடுதுறை ஆன்மீக பேரவை கோரிக்கை மனு அளித்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை காவிரி நதி துலாக் கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கடைசி நாளில் கடை முழுக்கு விழா மிகவும் கோலாகலமாக பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் புனித நீராடுவார்கள். ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறையில் விழாக்கோலம் பூண்டிருக்கும். ஆயிரக்கணக்கான மக்கள் காவிரி துலாக்கட்டத்திலும் மாயூரநாதர் திருக்கோயிலிலும் தரிசனம் செய்வார்கள்.

இந்த ஆண்டு மயிலாடுதுறை துலா உற்சவம் கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது. வருகிற 27-ஆம் தேதி அன்று காவிரியில் அம்மாவாசை தீர்த்தவாரி நடைபெற உள்ளது. மேலும் வரும் நவம்பர் 13 மயூரநாதர் திருக்கோயிலில் திருக்கல்யாண உற்சவம், நவம்பர் 15-ல் திருத்தேரோட்டம், நவம்பர் 16-ஆம் தேதி கடை முழுக்கு என மயிலாடுதுறை நகரிலுள்ள துலா கட்டத்திலும் மயூரநாதர் திருக்கோயிலிலும் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்வார்கள்.

மேற்கண்ட நாட்களில் அதிக மக்கள் நடமாட்டம் இருக்கும். எனவே, மயிலாடுதுறை நகருக்கும் பொதுமக்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கக் கோரி தஞ்சை சரக காவல்துறைத் தலைமை இயக்குனர் லோகநாதன் அவர்களிடம் மயிலாடுதுறை ஆன்மீக பேரவை சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் டாக்டர் ராம.சேயோன் மனு அளித்தார்.

Leave a Reply

You may have missed

You cannot copy content of this page