3rd December 2021

தேசிய நூலக வார விழா

சீர்காழியில் 52-ஆவது தேசிய நூலக வார விழா, நூல்கள் அறிமுகம், கண்காட்சி ஆகிய விழாக்கள் அண்மையில் நடைபெற்றன.

சீர்காழி கிளை நுலகப் பணியாளர்களும், வாசகர் வட்டமும் இணைந்து 3நாள்கள் இவ்விழாவை நடத்தினர். முதல் நாளில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு வாசகர் வட்டத் தலைவர் செம்மலர். வீரசேனன் தலைமை வகித்தார். சீர்காழி நகர வர்த்தக சங்கத் தலைவர் சிவசுப்பிரமணியன் கண்காட்சியை திறந்து வைத்து நூல் நிலையத்தின் அவசியம் குறித்தும், வாடகைக் கட்டடத்தில் இயங்கும் நூலகத்தை அதற்கென அரசால் ஒதுக்கப்பட்ட இடத்தில் சொந்தக் கட்டடம் கட்டி மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார். துளிர் அறிவியல் இயக்கப் பொறுப்பாளர் நந்த. ராஜேந்திரன் மற்றும் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர் பாபு நேசன், திருக்குறள் பயன்பாட்டு பேரவை முன்னாள் செயலர் கு. ராஜாராமன் ஆகியோர் வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார். இதில், கிளை நூலகர் விஜய், நூலகப் பணியாளர் ரகு திரளான பள்ளி மாணவர்கள், வாசகர்கள், வாசகர் வட்டப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, 2-வது நாளன்று நூல்கள் அறிமுக விழாவுக்கு வழக்குரைஞர் சுந்தரய்யா தலைமை வகித்தார். திருக்குறள் பண்பாட்டுப் பேரவை முன்னாள் தலைவர் ராஜாராமன் முன்னிலை வகித்தார்.
புலவர் சண்முகம் தான் எழுதிய புத்தகத்தை அறிமுகம் செய்தார். முனைவர் சதீஷ் ஆசிரியராக உள்ள ‘வெட்சி’ என்ற காலாண்டு இதழை அறிமுகப்படுத்தி பேசினார். பூம்புகார் கல்லூரியில் பணியாற்றிய ஓய்வுபெற்ற வேதியல் பேராசிரியர் வீழிநாதன் வாழ்த்துரை வழங்கினார். வழக்குரைஞர் ராஜசேகர் கருத்துரை வழங்கினார். நூலகர் சங்கர் வரவேற்றார். ராமநாதன் நன்றி கூறினார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன.

Leave a Reply

You cannot copy content of this page