3rd December 2021

மறைமுகத் தேர்தல்: மயிலாடுதுறை வழக்குரைஞர்கள் கூட்டமைப்பு கண்டனம்

உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர் ஆகியோரை மறைமுகமாகத் தேர்ந்தெடுக்க வழிவகை செய்யும் அவசரச் சட்டத்தை பிறப்பித்த தமிழக அரசுக்கு மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்குரைஞர்கள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர் மற்றும் பேரூராட்சித் தலைவர் ஆகியோரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறை இருந்தது. இந்நிலையில்,  நவம்பர் 19-ஆம் தேதி கூடிய தமிழக அரசின் அமைச்சரவை கூட்டத்தில் திடீரென உள்ளாட்சித் தேர்தலுக்கான நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு, மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர் மற்றும் பேரூராட்சித் தலைவர் ஆகியோரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்காமல், கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய மறைமுக தேர்தலை நடத்த தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது.

இந்த அவசரச் சட்டம் பஞ்சாயத்துராஜ் நடைமுறைக்கு எதிரானது. மகாத்மாகாந்தி, வினோபா ஆகியோர் கண்ட கிராம சுயராஜ்ய கனவுக்கு விரோதமாக உள்ளது. முற்றிலும் ஜனநாயக விரோதமான முறையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக அரசு தயாராகி வருகிறது.

மறைமுகத் தேர்தல் என்பது ஜனநாயக படுகொலை ஆகும். மேலும் கவுன்சிலர்களால் தலைவர் தேர்ந்தெடுக்கும் முறை நடைமுறைப்படுத்தும்போது குதிரை பேரம் என்று சொல்லக்கூடிய மாபெரும் ஊழலுக்கு வழிவகுக்கும். கவுன்சிலர்கள் கட்சி தாவலுக்கு வழிவகுக்கும். எனவே தமிழக அரசு உடனடியாக மறைமுகத் தேர்தல் வழிவகை செய்யும் அவசரச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வழக்குரைஞர்கள் அக்கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராம.சேயோன் தெரிவித்தார்.

Leave a Reply

You cannot copy content of this page