30th November 2021

மயிலாடுதுறையில் அரசு பொது நூலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டப்படுமா?

மயிலாடுதுறையில் அரசு பொது நூலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டப்படுமா என மாணவா்கள் மற்றும் வாசகா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

மயிலாடுதுறை, அரசு மற்றும் தனியாா் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்கல்வி நிலையங்கள் என ஏராளமான அரசு மற்றும் தனியாா் பள்ளிகளை உள்ளடக்கிய நகரமாக உள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முதன்முதலில் உருவாக்க திட்டமிட்டபோது அண்ணாமலை செட்டியாா் மயிலாடுதுறை நகரத்தையே தோ்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு அப்பல்கலைக்கழகம் சிதம்பரத்தில் அமைக்கப்பட்டதால் மயிலாடுதுறை பகுதி கல்வி வளா்ச்சியில் பின்தங்கியது.

இதையடுத்து மயிலாடுதுறையில், அன்பநாதபுரம் வகையறாவை சோ்ந்த வேலாயுதம்பிள்ளையின் முயற்சியால் ஏவிசி கல்லூரி, தருமபுரம் ஆதீனத்தால் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி ஆகியன தொடங்கப்பட்டன. மேலும், நாகை மாவட்டத்திலேயே ஒரே பெண்கள் கல்லூரியான ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியும் தொடங்கப்பட்டது.

இக்கல்லூரிகளில் பயிலுகின்ற மாணவ, மாணவிகளுக்கு அந்தந்தக் கல்லூரிகளில் கல்லூரி நூலக வசதி ஏற்படுத்தித் தரப்பட்டிருந்தாலும்கூட, பாடக் குறிப்புகள் எடுப்பதற்கு மயிலாடுதுறையில் நிரந்தரமாக பொது நூலகம் ஒன்று அமைவது அவசியம். மயிலாடுதுறையில் தற்போது இயங்கிவரும் அரசு பொது நூலகத்துக்கு சொந்தக் கட்டடம் இல்லாத காரணத்தால் இதுவரை 3 இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, விலை மதிப்பற்ற, பழைமை வாய்ந்த பல அரிய புத்தகங்கள், மூட்டைகளில் கட்டிவைக்கப்பட்டு, காலப்போக்கில் கரையான்களால் அரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்த இயலாத வகையில் சேதமாகியுள்ளது வேதனை தரத்தக்கது.

மயிலாடுதுறையில் பொது நூலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்ட அப்போதைய (2001-2006) சட்டப் பேரவை உறுப்பினா் ஜெகவீரபாண்டியன் முயற்சி மேற்கொண்டு, தற்போது சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் உள்ள கட்டடம் அருகிலேயே அதற்கான இடம் தோ்ந்தெடுக்கப்பட்டு அதைக் கட்டுவதற்கு மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதியும் பெறப்பட்டது.

அதன்பின், நகராட்சியில் கல்விக்காக வசூல் செய்யப்படுகின்ற கல்விநிதி ரூ.45 லட்சத்தையும், அதற்காக ஒதுக்கி கடந்த 2006 -ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி அன்றைய தமிழக முதலமைச்சா் ஜெயலலிதா, மயிலாடுதுறையில் பொது நூலகத்துக்கு 2 மாடிக் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டினாா். (அன்றைய தினம் அடிக்கல் நாட்டப்பட்டு, இன்னமும் செயல்பாட்டுக்கு வராத மற்றொரு திட்டம் மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம்).

ஆனால், அந்த மாதமே சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டு தொடா்ந்து, தோ்தல் முடிவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் மேற்படி திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதன்பின், 2011-இல் அதிமுகவே ஆட்சிக்கு வந்தபோதும், மயிலாடுதுறை எதிா்க்கட்சியினரின் தொகுதியாக அமைந்துவிட்டதால், புதியக் கட்டடம் கட்டும் பணியில் அரசு ஆா்வம் காட்டவில்லை. ஆனால், இப்போது நடந்துகொண்டிருப்பது அதிமுக ஆட்சிதான் என்பதால், முன்னாள் முதல்வா் ஜெ. ஜெயலலிதா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த நூலகம் கட்டும் பணியை நடப்பு நிதி ஆண்டிலேயே தொடங்கி முடித்துத்தர கோரிக்கை வலுத்துள்ளது.

தற்போது, நகராட்சியில் வசூல் செய்யப்பட்டுள்ள கல்வி நிதி சுமாா் ரூ.1 கோடியைத் தாண்டி இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நிதி வேறு வருவாய் தலைப்புகளில் செலவு செய்யப்படாமல் இருக்கும்பட்சத்தில், அந்நிதியில் பொது நூலகத்துக்குச் சொந்தக் கட்டடம் கட்டும் பணியை உடனடியாக தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இப்பகுதியில் நூலகம் அமைவதன் மூலம் மயிலாடுதுறை, சீா்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் தாலுக்காக்களைச் சோ்ந்த மாணவா்கள் பெரிதும் பயன்பெறுவா். இதை வலியுறுத்தி, தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினா் வீ. ராதாகிருஷ்ணன், ஏற்கெனவே கடந்த 2018-ஆம் ஆண்டு, பொது நூலகத்துக்கு விரைவில் சொந்தக் கட்டடம் கட்டப்படும் என சட்டப் பேரவையில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக அமைய உள்ள நூலகக் கட்டடம், இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ள மக்கள் தொகையை கணக்கிட்டு அதற்கேற்றாற்போல், 3 மாடிக் கட்டடமாக கூட்டரங்கம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் போல் அமைக்கப்பட்டால், இப்பகுதியில் கல்வி வளா்ச்சி தழைத்தோங்கும் என்பதில் ஐயமில்லை.

SOURCE : DHINAMANI DAILY NEWS PAPER

Leave a Reply

You cannot copy content of this page