25th September 2021

ஜெயலலிதாவின் திட்டப்படி மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்

தமிழக முதல்வருக்கு காவிரி அமைப்பு கோரிக்கை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திட்டப்படி, மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு காவிரி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து எழுத்தாளரும், காவிரி அமைப்பின் தலைவருமான கோமல் அன்பரசன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:

மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் 11 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த கோட்டத்தில் உள்ள மக்கள் தற்போதைய மாவட்டத் தலைநகரான நாகப்பட்டினத்துக்கு சென்று வர புதுச்சேரிக்கு உள்பட்ட காரைக்கால் வழியாகவோ அல்லது திருவாரூர் மாவட்டம் வழியாகவோ தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மயிலாடுதுறை பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே மாவட்ட தலைநகரான தஞ்சாவூருக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த நகராக மயிலாடுதுறை திகழ்ந்தது. மயிலாடுதுறை நீதிமன்றம், கோட்டாட்சியர் அலுவலகம் ஆகியவை 100 ஆண்டுகள் கடந்த வரலாற்று பெருமை கொண்டவை. அதனால்தான் ஆந்திரத்தையும் சேர்த்து அகண்ட மெட்ராஸ் மாகாணமாக இருந்தபோது 29 ஊர்களை மட்டுமே ஆங்கிலேயர்கள் முதன்முதலில் நகரம் என்று அடையாளம் கண்டு அந்த ஊர்களை நகராட்சியாக உருவாக்கினார்கள். இவ்வாறு பழைய தமிழ்நாட்டில் முதல்முறையாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளில் ஒன்று மாயூரம் என்று அழைக்கப்பட்ட மயிலாடுதுறை.

மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி, 2004-ஆம் ஆண்டு மயிலாடுதுறை மாவட்டம் உருவாவதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டன. இந்த நிலையில் சுனாமி பேரழிவு ஏற்பட்டதால் இந்த பணிகள் நின்றுபோயின.
தொடர்ந்து, 2010-ஆம் ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி மயிலாடுதுறை தனி மாவட்டத்துக்கான சட்டப்பூர்வ அறிக்கையை புதிதாக அளிக்குமாறு, தமிழக அரசு நாகை மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியது. இதையடுத்து, முழுமையான அறிக்கை தயார் செய்யப்பட்டு, மயிலாடுதுறை மாவட்டம் அமைக்கலாம் என்ற பரிந்துரையுடன் மாவட்ட ஆட்சியரால் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனவே, மயிலாடுதுறை மக்களின் கால் நூற்றாண்டு கால நியாயமான கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட இருந்த மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்க ஆவண செய்ய வேண்டும் என அம்மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

https://www.youtube.com/watch?v=qAm4F2fxuMYhttps://www.youtube.com/watch?v=_iakU2gt3RI

Leave a Reply

You cannot copy content of this page