3rd December 2021

மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்காவிட்டால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க வேண்டும்; வக்கீல்கள் கூட்டமைப்பு தீர்மானம்

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்காவிட்டால் உள்ளாட்சி தேர்தலை அரசியல் கட்சியினர், பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டுமென்று வக்கீல்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

மயிலாடுதுறையில் மாவட்டத்திற்கான வக்கீல்கள் கூட்டமைப்பு கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராமசேயோன் தலைமையில் நடந்தது. இணை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் முன்னிலை வகித்தார். வக்கீல்கள் சுரேஷ், புகழரசன், துணை ஒருங்கிணைப்பாளர் அறிவொளி, வினோத், சிவச்சந்திரன், விஜயகுமார் உட்பட பலர் பேசினர்.

கூட்டத்தில் மயிலாடுதுறை கோட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 30 வருடங்களாக மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்று தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் இதைவிட மக்கள் தொகை குறைவாக உள்ள பல புதிய மாவட்டங்களை தமிழக அரசு புதிதாக அறிவித்து தொடங்கியுள்ளது.

டிசம்பர் 31ம் தேதிக்குள் மயிலாடுதுறையை தனிமாவட்டமாக தமிழக அரசு அறிவிக்கவில்லை என்றால் மயிலாடுதுறை கோட்டத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள், பொது மக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க வேண்டுவது, தமிழ் தெரியாத விண்ணப்பதாரர்களை நீதிபதி தேர்வுக்கு அனுமதித்த தமிழக அரசுக்கும், தேர்வாணையக்குழுவிற்கும் கண்டனம் தெரிவிப்பது, நாகை மாவட்டத்திற்கான மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க அரசை கேட்டுக்கொள்வது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

You cannot copy content of this page