3rd December 2021

வரும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில், மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஆளுநருக்கு மனு- வழக்குரைஞர் ராம.சேயோன்

வரும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் உரையாற்ற உள்ள தமிழக ஆளுநருக்கு, மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்கக் கோரி மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்குரைஞர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராம.சேயோன் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை உள்கோட்டம் முக்கியமான ஓர் உள்கோட்டம் ஆகும். மயிலாடுதுறை நான்கு திசைகளிலும் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களால் சூழப்பட்ட நகரம். மயிலாடுதுறை உள்கோட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம் மற்றும் தரங்கம்பாடி ஆகிய 4 தாலுகாக்கள் உள்ளன. கடந்த 30 ஆண்டுகளாக மயிலாடுதுறை உள்கோட்டத்தைச் சேர்ந்த மக்கள் தமிழக அரசை மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை அமைக்க கோரி வருகிறார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்தில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் மயிலாடுதுறை உள்கோட்டத்தில் வசிக்கின்றனர்.

மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், மணல்மேடு, பொறையாறு ஆகிய ஊர்களிலிருந்து தங்களின் மாவட்ட தலைநகரான நாகப்பட்டினத்தை சென்று அடைவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். அவர்கள் மாவட்டத் தலைநகருக்கு செல்ல வேண்டும் என்றால் புதுவை மாநிலமான காரைக்கால் மாவட்டத்தை தாண்டியோ அல்லது மற்றொரு மாவட்டமான திருவாரூரை தாண்டியோ செல்ல வேண்டிய நிலை உள்ளது. தமிழக அரசு மயிலாடுதுறை உள்கோட்டத்தை விட சிறிய பகுதிகளான பெரம்பலூர், அரியலூர் ஆகியவையே மாவட்டங்களாக அறிவித்து உள்ளது. மேலும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி ஆகவும் விளங்குகிறது.

மயிலாடுதுறை நகரில் இருந்து நான்குபுறமும் சிதம்பரம், காரைக்கால், கும்பகோணம் மற்றும் திருவாரூர் ஆகியவை சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. இந்த நகரங்களுக்கு எல்லாம் நடுநகராக மயிலாடுதுறை விளங்குகிறது. அதுமட்டுமல்ல மயிலாடுதுறை ஒரு மிகச்சிறந்த ஆன்மீக பூமியாகும். 108 திவ்ய தேசங்களில் 50-க்கும் மேற்பட்ட திவ்யதேசங்கள் மயிலாடுதுறை உள்கோட்டத்தில் அமைந்துள்ளன. 276 தேவார தலங்களில் 100-க்கும் மேற்பட்ட தேவார தலங்கள் மயிலாடுதுறை உள்கோட்டத்தில் அமைந்துள்ளது.

சமயக்குறவர்களுள் ஒருவரான திருஞானசம்பந்தர் மயிலாடுதுறை உட்கோட்டத்தில் உள்ள சீர்காழி நகரில் அவதரித்தார். நாலாயிர திவ்யபிரபந்தத்தில் பெரும்பகுதியை பாடிய திருமங்கையாழ்வார் சீர்காழி தாலுகாவில் திருக்குறையலூரில் அவதரித்தார். மேலும் சித்தர்களான திருமூலர், குதம்பைச் சித்தர் ஆகியோர் மயிலாடுதுறை உட்கோட்டத்தில் வாழ்ந்துள்ளனர். மேலும் புனித காவிரி நதி வங்காள விரிகுடாக் கடலில் பூம்புகார் என்ற சரித்திர ஊரில் கலக்கிறது.

இப்படி பெருமைமிக்க மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிப்பதற்கு தமிழக அரசுக்கு எந்த சட்ட சிக்கலும் இல்லை. ஆகையால் வரும் சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் நிகழ்த்தக் கூடிய ஆளுநர் உரையில் மயிலாடுதுறை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என அவர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You cannot copy content of this page