30th November 2021

மயிலாடுதுறை: நள்ளிரவில் பக்தர்கள் திடீர் போராட்டம்

மயிலாடுதுறையில் மாயூரநாதர் கோயில் தேர் திருவிழா நடைபெறுவதற்கு இடையூறாக உள்ள போக்குவரத்து சிக்னல்களை அகற்றக் கோரி, ஓலை சப்பரத்தை நடுவீதியில் நிறுத்தி, திங்கள்கிழமை நள்ளிரவு பக்தர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாதம் நடைபெறும் பிரசித்தி பெற்ற துலா உத்சவம், கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி ஐப்பசி முதல்நாள் தீர்த்தவாரி உத்சவ, நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. காவிரியை மையப்படுத்தி நடைபெறும் இந்த உத்ஸவத்தில், மாயூரநாதர் கோயிலில் 5-ஆம் நாள் திருவிழாவாக மயிலம்மன் புஜையும், அதை தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாள் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட ஓலைச் சப்பரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ஓலைச் சப்பரம் சின்னக்கடைத் தெருவைக் கடக்க முற்பட்டபோது, அப்பகுதியில் அண்மையில் புதிதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் காரணமாக வீதி உலா நிகழ்ச்சி பாதியில் தடைபட்டது.

ஒருபுறம் உயர் மின்னழுத்த வயர்கள் சென்ற நிலையில், மறுபுறம் புதிதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல்கள் காரணமாக சப்பரத்தைக் கொண்டு செல்ல சிரமம் ஏற்பட்டதால், சுவாமி ஊர்வலம் நள்ளிரவில் தடைபட்டது.

இதையடுத்து ஊர்வலம் மேலும் முன்னேறிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் மற்றும் கண்காணிப்பு கேமரா தனியார் நிறுவனங்களின் பேனர்களால் சப்பரம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி கோயில் பணியாளர்கள் மற்றும் சுவாமி தூங்குபவர்கள் சப்பரத்தை நடுவழியில் நிறுத்தி விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வருகின்ற 15-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுவதற்கு இடையூறு அளிக்கும் சிக்னல்களை அகற்ற கோரினர்.

இதையடுத்து, மயிலாடுதுறை காவல் துணைக் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையில் போலீசார் நிகழ்விடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக சிக்னல்களை சீரமைத்து தேர் திருவிழா நடைபெற ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து, மிகுந்த சிரமத்துக்கு இடையே ஓலைச் சப்பரம் அந்த இடத்தை கடந்து சென்றது. இதனால் ஒரு மணி நேர தாமதத்துக்கு பின்னர் சப்பரம் வீதியுலா சென்றது.

Leave a Reply

You cannot copy content of this page