30th November 2021

மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயல்படாமல், மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி அமைக்க அணைத்து கட்சி வலியுறுத்தல்

தமிழக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயல்படாமல் மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி அமைத்திட வேண்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மயிலாடுதுறையில் அணைத்து கட்சியினர், வர்த்தக சங்கத்தினர் சேவை சங்கம் ஆலோசனை கூட்டம் முன்னாள் எம்எல்ஏவும், பொது தொழிலாளர் சங்க தலைவருமான ஜெகவீர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. திமுக நகர செயலாளர் குண்டாமணி செல்வராஜ், பாமக மாநில துணைத் தலைவர் தங்க அய்யாசாமி, நகர செயலாளர் அத்தான் ஜெயராமன், பாஜக பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கோவி. சேதுராமன் மதிமுக நகர செயலாளர் மார்க்கெட் கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் வேலுகுபேந்திரன், தேமுதிக நகர செயலாளர் பண்ணை சொ.பாலு, மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வீதிவிடங்கன், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தொடர்ந்து நாகை வடக்கு பகுதி இன்றைய தமிழக அரசால் புறக்கணிக்கப்படுவது கடும் கண்டனம் தெரிவிப்பதுடன் வருங்காலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு என்று ஒதுக்கப்படுகின்ற திட்டங்கள் புறக்கணிக்கப்பட்ட நாகை வடக்கு மாவட்ட பகுதிகளான மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகாரில் தொடங்கிட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

குறிப்பாக மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் தான் வைக்க வேண்டும் என்று அனைவரும் வலியுறுத்தினர். தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டமாக்கிட வேண்டுமென்றும் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழ்நாட்டிற்கு என்று மத்திய அரசு 9 அரசு மருத்துவ கல்லூரிகளை அனுமதி வழங்கியதற்கும் அதில் ஒன்றை நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஒதுக்கியதற்கும் மயிலாடுதுறை கோட்ட அரசியல் கட்சிகள் வணிகர் சங்கங்கள் மற்றும் சேவை சங்கங்கள் சார்பாக மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாகை மாவட்டத்தில் அமைய உள்ள மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்காமல் நாகை தெற்கு பகுதியில் உள்ள ஒரத்தூர் கிராமத்தில் அமைக்க உள்ளதாக வந்துள்ள செய்தி மயிலாடுதுறை கோட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளித்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற நாளிலிருந்து நாகை மாவட்டத்தின் வடக்கு பகுதி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு இந்த அரசு நடந்து கொள்வதை மாற்றிக்கொண்டு மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி தொகுதி மக்களின் நலன் கருதி மருத்துவக் கல்லூரி அமைத்திட வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

நாகை மாவட்டத்திலேயே அதிக வருவாய் தரக்கூடிய பகுதியும், நீண்டநாள் கோரிக்கையுமான மூன்று சட்டமன்ற தொகுதிகள் மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி தொகுதிகள் அடங்கிய பகுதியின் மையமான மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பது உள்பட எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொது தொழிலாளர்கள் சங்க செயலாளர் அப்பர் சுந்தரம் வரவேற்றார். சீர்காழி பொது தொழிலாளர் சங்க அமைப்பாளர் கோடங்குடி சங்கர் நன்றி கூறினார்.

Leave a Reply

You cannot copy content of this page