20th September 2021

நூறாண்டுகளைக் கடந்து மங்காத பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வரும் மில்லி கிராம் மெட்டல் பாக்ஸ்

மயிலாடுதுறை அருகே 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த மிகக் குறைவான எடையில் தயாரிக்கப்பட்ட மெட்டல் பாக்ஸ் இன்றளவும் மங்காமல் உள்ளதால் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

நாகை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த நீடூர் பகுதியை சேர்ந்தவர் அமினுல்லா. இவர் தனது மூதாதையர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மிக சிறிய மெட்டல் பாக்ஸ் ஒன்றை பாதுகாத்து வருகிறார். இந்த மெட்டல் பாக்ஸ் குளோரின், காப்பர், கார்பன், நிக்கல் சிங், அயன், சிலிக்கான் பொட்டாசியம், அலுமினியம் உட்பட சுமார் 20 மூலப்பொருட்களை கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது. 14.7 மில்லி கிராம் மட்டுமே எடைகொண்ட இந்த மெட்டல் பாக்ஸ் 4 சென்டி மீட்டர் நீளமும் 3.75 சென்டி மீட்டர் அகலமும் உள்ளது.

வெள்ளி நிறத்தில் காணப்படும் இந்த மெட்டல் பாக்ஸ் உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும். இன்றளவும் அதன் நிறம் மங்காமல் இருப்பதை உணர்ந்த அமினுல்லா அதனுடைய சிறப்பு அம்சங்களை தெரிந்து கொள்ளும் நோக்கோடு சென்னையிலுள்ள இந்திய தொழில் நுட்பக் கழக உலோகவியல் மற்றும் பொருட்கள் பொறியியல்துறையில் ஆய்விற்காக அனுப்பி அதனுடைய ஆய்வறிக்கையையும் பெற்றுள்ளார். இதேபோல அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் மெட்டல் பாக்ஸ்ன் தன்மை குறித்து ஆய்வு செய்து அதனுடைய அறிக்கைகளையும் பத்திரமாக வைத்துள்ளார்.

தொழில்நுட்பங்கள் இல்லாத அந்த காலத்திலேயே மிகவும் குறைவான எடையுடன், அழகிய வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது வியப்பை தருவதாக கூறும் அமினுல்லா, இந்த மெட்டல் பாக்ஸ் நம்மிடம் இருப்பது நீடூருக்கும், மயிலாடுதுறைக்கும் மட்டுமல்ல நம்முடைய இந்திய நாட்டிற்கே பெருமை. அந்த காலத்திலேயே இவ்வளவு எடை குறைவான ஒரு பெட்டியை எப்படி செய்திருப்பார்கள், எதை கொண்டு தயாரித்திருப்பார்கள் என அறிவியல் விஞ்ஞானிகள் தான் இனிமேல் இதை முழுமையாக ஆராய்ச்சி செய்து கூறவேண்டும். இதை விட எடை குறைவாக இதுவரை எங்கும் இருப்பதாக தகவல்கள் தெரியவில்லை.

பல ஆண்டுகளாக இந்த பெட்டி நிறம் மாறாமல் அப்படியே இருப்பது வியப்பாக உள்ளது. மேலும், எங்கள் வீட்டில் பாரம்பரியமாக சில பொருட்கள் உள்ளன. அதில் இதுவும் ஒன்றாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

ஐந்தாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த பாரம்பரிய பெருமையும், பண்பாட்டு சிறப்புகளும் கொண்ட மயிலாடுதுறை பகுதியில் மங்காத பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வரும் நீடுர் அமினுல்லாவின் மெட்டல் பாக்ஸ் ஓர் அதிசயமே!

செய்தி : குணசீலன் / படங்கள் : யோகுதாஸ்

[edsanimate_start entry_animation_type= “pulse” entry_delay= “1.5” entry_duration= “0.5” entry_timing= “linear” exit_animation_type= “” exit_delay= “” exit_duration= “” exit_timing= “” animation_repeat= “infinite” keep= “yes” animate_on= “load” scroll_offset= “” custom_css_class= “”][edsanimate_end]

 

Leave a Reply

You cannot copy content of this page