3rd December 2021

நாகையில் ஜன.3-இல் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் தொடக்கம்

நாகையில் ஜனவரியில் நடைபெறவுள்ள ரணவத்துக்கான ஆள்சேர்ப்பு முகாமில், நாகை உள்ளிட்ட 15 மாவட்டங்களைச் சேர்ந்த தகுதியான இளைஞர்கள் பங்கேற்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி .நாயர் தெரிவித்தார்.

இது குறித்து, ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது: நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஜனவரி 3 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு முகாமில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் ஆகிய 15 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம்.

17 முதல் 23 வயதுடைய இளைஞர்கள் படைவீரர் – தொழில்நுட்பம், (பிளஸ் – 2 தேர்ச்சி ), படைவீரர் – பொதுப்பணி (பத்தாம் வகுப்பு தேர்ச்சி) மற்றும் படைவீரர் – கடைநிலை ஊழியர்கள் (8 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி ) ஆகிய பணியிடங்களுக்கு நவம்பர் 19-முதல் டிசம்பர் 18-ஆம் தேதி வரை www.JOININDIANARMY.NIC.IN என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நாகப்பட்டினம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேரடியாக அல்லது 04365-253042 ஆகிய எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்துகொள்ளலாம். ஆள்சேர்ப்பு முகாம் சார்பில், இதுவரை 3 ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. முகாம் சிறப்பாக நடைபெற தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முகாமையொட்டி, தங்கும் வசதிகள், போக்குவரத்து வசதிகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

இது குறித்து, திருச்சி ஆள்சேர்ப்பு கிளை அலுவலக இயக்குநர் கர்னல் ஆர்.எஸ்.ரத்தோர் கூறியது : விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் அனுப்ப வேண்டும், வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறும் இடைத்தரகர்களை யாரும் நம்ப வேண்டாம் என்றார் அவர்.

முன்னதாக நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில், நாகப்பட்டினம் முன்னாள் படைவீரர்கள் நல அலுவலக உதவி இயக்குனர் லெப்டினென்ட் கர்னல் ஆர். பி . வேணு அகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You cannot copy content of this page