3rd December 2021

முத்தமிழ் அறிவியல் மன்ற முப்பெரும் விழா

முத்தமிழ் அறிவியல் மன்றத்தின் 14-ஆம் ஆண்டு விழா, இலக்கிய விழா மற்றும் சான்றோர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா குத்தாலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மன்றத் தலைவர் செ.நடராசன் தலைமை வகித்தார். உலகத் தமிழ்க் கழக தலைவர் சிவ.கோ, மதிமுக மாணவரணி மாநில துணை அமைப்பாளர் ப.த.ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் முத்து. ஜானகிராமன் ஆண்டறிக்கை வாசித்தார். துணைத் தலைவர் கா.ஜெகதீசன் தீர்மானங்களை வாசித்தார்.

விழாவில் தில்லி தமிழ்ச்சங்க பொதுச் செயலாளர் ரா.முகுந்தன் உள்ளிட்டோருக்கு விருதுகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி த.மதிவாணன் வழங்கி விழா பேருரையாற்றினார். 6 முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கருத்தரங்கம், பல்சுவை கலையரங்கம் ஆகியவை நடத்தப்பட்டு வென்றவர்களுக்கு பரிசுகளை புதுவை பேராசிரியர் கோ.சாரங்கபாணி வழங்கினார்.

விருது பெற்றவர்களை பாராட்டி மன்ற துணைத் தலைவர் குரா கவிதை வாசித்தார். இதில், மாவட்டக் கல்வி அலுவலர் கி.குமரன், மன்ற பொதுச் செயலாளர் காந்திலெனின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக மன்றத்தின் செயலாளர் ராசகுமார் வரவேற்றார். முடிவில் பொருளாளர் கலியமூர்த்தி நன்றி கூறினார்.

Leave a Reply

You cannot copy content of this page