மயிலாடுதுறை மலைமுருகன் கோவிலில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு வழிபாடு!



மயிலாடுதுறையில் தைப்பூச திருவிழாவையொட்டி முருகன் கோவில்களுக்கு பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மயிலாடுதுறை துலாக்கட்டம் காவிரி ஆற்றங்கரையில் இருந்து பக்தர்கள் அலகு காவடி, பால் காவடி எடுத்து கொண்டு ஊர்வலமாக பட்டமங்கலத் தெரு, காந்திஜி சாலை வழியாக கச்சேரி சாலையில் உள்ள மலைக்கோவில் எனப்படும் முருகன் கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர் காவடி ஏந்தி வந்த பக்தர்கள் கோவிலை வலம் வந்து கற்பூரம் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல மயிலாடுதுறை கூறைநாட்டிலுள்ள தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான குமரக்கட்டளை சுப்பிரமணிய சாமி கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் உள்ள முருகப்பெருமானுக்கு பால், பன்னீர், மஞ்சள் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பூம்புகார் அருகே சாய வனத்தில் சாயாவனேஸ்வரர் கோவிலில் முருகப்பெருமான் வில்லேந்திய வேலவராக தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். தைப்பூசத்தை வில்லேந்திய வேலவருக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.