30th November 2021

சட்டப் பேரவையில் முதல்வருக்கு எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் நன்றி

நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையைப் பிரித்து புதிய மாவட்டம் உருவாக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக முதல்வர் அறிவித்ததற்கு, புதன்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைக் கூட்டத்தில் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.

இது குறித்து, சட்டப் பேரவையில் அவர் பேசியது:

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை, பூம்புகார் மற்றும் சீர்காழி சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த பொது மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில், நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து, மயிலாடுதுறையை தலைமை இடமாகக் கொண்டு, புதிய மாவட்டம் தோற்றுவிக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது என அறிவித்த முதல்வர், கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த துணை முதல்வர் மற்றும் அனைத்து அமைச்சரர்களுக்கும் எனது தொகுதி மக்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், மயிலடுதுறையை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க அரும்பாடுபட்ட பூம்புகார், சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர்கள், வர்த்தக சங்கப் பொறுப்பாளர்கள், வழக்குரைஞர் சங்கத்தினர் மற்றும் விவசாய சங்கத்தினருக்கும்,பொதுமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.என்றார்.

முன்னதாக, மயிலாடுதுறை கொற்கை ஊராட்சியில் கால்நடை கிளை நிலையம் அமைக்கவும், கிராமந்தோறும் நடமாடும் கால்நடை மருந்துகளை அனுப்பி வைக்கவும் வலியுறுத்தனார். அவருக்கு பதிலளித்துப் பேசிய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கொற்கை ஊராட்சியில் 320 மாடுகள், 49 ஆடுகள், மற்றும் கோழியினங்கள் 37 அலகுகள் என மொத்தம் 409 கால் நடை அலகுகள் மட்டுமே உள்ளன. புதிதாக கால்நடை கிளை நிலையம் அமைக்க குறைந்தது 3000 கால்நடை அலகுகள் இருக்க வேண்டும். எனவே, கால்நடை கிளை நிலையம் அமைக்க சாத்தியக் கூறுகள் இல்லை. இருந்தபோதிலும், நிதி நிலைக்கு ஏற்ப சட்டப் பேரவை உறுப்பினரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றும், தற்போது கால்நடைகளுக்காகத் தொடங்கப்பட்டுள்ள அம்மா ஆம்புலன்ஸ் வாகன சேவை மூலம் அனைத்து ஊராட்சிகளிலும் கால்நடை சிகிச்சை முகாம்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

You cannot copy content of this page