இனி பவர்கட் இருக்காது.. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை – அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!



சட்டப்பேரவையில் தமிழகத்தில் ஏற்பட்ட மின்தடை தொடர்பாக அரசியல் கட்சியினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அப்போது பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி 17,100 மெகாவாட் மின்சாரம் தேவையுள்ள நிலையில், 13100 மெகாவாட் மின்சாரம் தான் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவித்தார். மேலும், கோடைகாலத்தில் மின் தேவை அதிகரித்துள்ள நிலையில் அனல் மின்சாரத்திற்கு தேவையான நிலக்கரி இல்லாததால் மின் தடை ஏற்படுவதாகும் அவர் கூறினார்.
தற்போது அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணத்தால் விவசாயிகள், சிறு குறு தொழில் நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்றார். நகரப்பகுதியிலும் அதிக அளவில் மின்வெட்டால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே மின்வெட்டை சரிசெய்ய அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய, பாமக ஜி.கே.மணி, மின்தடை இல்லாத மாநிலமாக தமிழகத்தை அரசு காக்கவேண்டும் என்றார். இதே போல பேசிய காங்கிரஸ் உறுப்பினர் செல்வ பெருந்தகை, எல்லா துறைகளிலும் எப்படி இந்த அரசு செல்படுகிறதோ அதேபோல மின்சார துறையும் சிறப்பு செயல்படும் என்று நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 18ம் தேதி 312 மில்லியன் யூனிட் நுகர்வு 21ம் தேதி 363 மில்லியன் யூனிட்டாக உயர்ந்தது, இந்த நிலையில் ஒன்றிய அரசின் தொகுப்பில் இருந்து வரவேண்டிய 796 மெகாவாட் மின்சாரம் வரவில்லை என்றார். இதனால் மின்தடை ஏற்பட்டதாகவும், 3 ஆயிரம் மெகாவாட் குறைந்த விலையில் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கூறினார்.
மேலும் தமிழகத்தில் 41 இடங்களில் மட்டுமே மின்தடை ஏற்பட்டதாகவும், இதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மின்தடை சரிசெய்யப்பட்டதாக கூறினார். ஆனால் இதற்கு முன்பு மின்தடை ஏற்படாதது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள் ஆனால், கடந்த ஆண்டுகளில் 68 முறை மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த ஆட்சியில் ஒரு முறை மட்டுமே ஏற்பட்டதாக குறிப்பிட்டார்.
அப்போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்தார். அப்போது பேசிய அமைச்சர், நிலக்கரி ஒதுக்கீடு குறித்து பிரதமரை சந்தித்த போதும் முதலமைச்சர் வலியறுத்தினார். மேலும், இல்லாத ஒன்றை இருப்பதாக கூறி விஷம பிரச்சாரத்தை அதிமுக ஐடி விங்க் செய்து வருவதாகவும், வரும் 5 ஆண்டுகளில் மின் மிகை மாநிலமாக தமிழகத்தை முதலமைச்சர் மாற்றி காட்டுவார் என்றும், தொழிற்சாலைகளுக்கும், மக்களுக்கும் இனி எந்த சூழலில் இனி மின்தடை ஏற்படாமல், சீரான மின்சாரம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்த வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டிற்கு தினமும் 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை என்றும், மத்திய அரசு தினமும் 48,000 முதல் 50,000 டன் நிலக்கரியை ஒதுக்கீடு செய்து வந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக தினசரி நிலக்கரி ஒதுக்கீட்டை 20 ஆயிரம் டன் வரை குறைத்து வழங்குகிறது என்றும் தெரிவித்தார்.
அடுத்த இரண்டு மாதங்களுக்கு அதிக அளவில் நிலக்கரி இறக்குமதி செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். சீரான மின்சாரம் விநியோகிக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, ஐந்தாண்டுகளில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக நிச்சயம் மாறும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.