25th September 2021

ரத்தான தபால் துறை தேர்வு செப்.15-ல் தமிழில் நடக்கிறது!

தமிழகம் உள்பட நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்ட தபால்துறை தேர்வு மீண்டும் செப்டம்பர் 15 ஆம் நடைபெறும் என தபால் துறை அறிவித்துள்ளது.

தபால் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக ஜூலை 14-ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வு கேள்வித் தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் இருந்தது. தமிழ் உள்ளிட்ட மற்ற மாநில மொழிகளில் கேள்விகள் இடம் பெறவில்லை. இதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்தது.

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் கேள்வித் தாள்கள் இல்லாததற்கு அதிமுக, திமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இப்பிரச்சனை தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த எம்.பிக்கள் மக்களவையிலும் குரல் எழுப்பினர். மேலும், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்துவிட்டு தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மறுதேர்வை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

தபால் தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு மாநிலங்களவையில் தமிழக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழக எம்.பிக்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழ் உள்ளிட்ட மற்ற மாநில மொழிகளில் தபால் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தாா். மேலும், கடந்த ஜூலை 14-ம் தேதி நடைபெற்ற தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி நடைபெறும் என தபால் துறை அறிவித்துள்ளது. ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளிலும், ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநில மொழிகளிலும் தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

Source : https://www.timesnowtamil.com/tamil-nadu/article/postal-department-exams-on-september-15th/256462

Leave a Reply

You cannot copy content of this page