தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீண்டும் தொடங்கியது மின் உற்பத்தி: கப்பல்கள் மூலம் தமிழகம் கொண்டுவரப்பட்ட நிலக்கரி!



நிலக்கரி தட்டுப்பாடால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 அலகுகளில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், கப்பல்கள் மூலம் நிலக்கரி கொண்டுவரப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. தூத்துக்குடியில் உள்ள அரசுக்கு சொந்தமான அனல்மின் நிலையத்தில், 5 அலகுகள் மூலம் தலா 210 மெகாவாட் வீதம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தொழில்நுட்பக் கோளாறு மற்றும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 3 அலகுகள் கடந்த சில நாட்களாக செயல்படாமல் இருந்தன.
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நேற்று 4-வது அலகும் நிறுத்தப்பட்டது. 5-வது அலகில் மட்டுமே 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்நிலையில் அனல்மின் நிலையத்திற்கு தேவையான 60 ஆயிரம் டன் நிலக்கரி கப்பல்கள் மூலம் நேற்று தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து 2,3 மற்றும் 4-ம் அலகுகளில் இன்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. முதல் அலகில் மட்டும் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள நிலக்கரி 6 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.