வெப்ப சலனத்தால் தமிழகத்தில் 28ம் தேதி வரை மழை!



தமிழகத்தில் தொடர்ந்து நீடித்து வரும் வெயில் மற்றும் வெப்ப சலனம் காரணமாக 28ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழை ஒரு சில இடங்களில் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை காலம் தொடங்கி தற்போது கத்திரி வெயில் காலம் தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெப்ப சலனம் ஏற்பட்டு மழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் திடீரென உயர்வதும், குறைவதுமாக வானிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதால், மழை பெய்வதும் குறிப்பிட்ட வரம்புக்கு உட்படாமல் வெப்பத்தின் தன்மைக்கு ஏற்ப பெய்து வருகிறது.
இந்த வெப்ப சலனம் காரணமாக தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்கள், கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, ஈரோடு மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நேற்று இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்தது. அதில் அதிகபட்சமாக கொடுமுடியில் 110 மிமீ, வால்பாறை 90மிமீ, மோகனூர் 80மிமீ, சின்னகல்லார், பவானி 60மிமீ, நாமக்கல், ஆனைபாளையம் 50மிமீ, சேலம், குண்டலம், சின்கோனா, கடவூர், கொடைக்கானல், சூரளக்கோடு 40மிமீ, வேடசந்தூர், அரவக்குறிச்சி, பெருஞ்சாணி, பந்தலூர், புத்தன் அணை, அம்பாசமுத்திரம், பரமத்தி வேலூர், மாயனூர், உடுமலைப் பேட்டை, திருமூர்த்தி அணை 30மிமீ பெய்தது.
இதற்கிடையே, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. அதிகபட்சம் கரூரில் 104 டிகிரி, வேலூரில் 102 டிகிரி வெயில் நிலவியது. பிற மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவியது. இதையடுத்து ஏற்பட்டுள்ள வெப்ப சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்களில் இன்று தொட்ஙகி 28ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.