3rd December 2021

நியாய விலைக் கடைகளை எப்படி இயங்க வேண்டும்: பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் விளக்கம்

தமிழக முதல்வரின் ஆலோசனைப்படி கொரோனா பாதிப்பில் தமிழக மக்களுக்கான நியாயவிலைக் கடைகள் எப்படி இயங்க வேண்டும் என்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டம் பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினர் பவுன்ராஜ் தலைமையில் செம்பனார்கோயில் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தரங்கம்பாடி தாலுக்கா வடடாச்சியர், வட்ட வழங்கல் அலுவலர், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சிஅலுவலர்கள் கலந்து கொண்டனர். தமிழக முதலமைச்சரின் அறிவிப்பின்படி 02.04.2020 முதல் 12.04.2020 வரை நியாய விலைக் கடைகள் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தேவையான குடிமைப்பொருள் வழங்கப்பட உள்ள முறைகளை விவரமாக பூம்புகார் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பவுன்ராஜ் விளக்கிக் கூறினார்.

முதல்கட்டமாக ஆதிதிராவிடர் /பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வழங்கிட வேண்டும். அதன் பின்னர் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு வழங்கிட வேண்டும். பின்னர் இதர பகுதிகளுக்கு வழங்கிட வேண்டும். நியாயவிலை கடைகள் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தேவையான குடிமைப்பொருள் பெற வருவாய்துறை கிராம பணியாளர், ஊராட்சி செயலர்கள் வாயிலாக முன்னதாகவே டோக்கன் வழங்கி சிரமமின்றி கூட்டம் இல்லாத வகையில் சமூக இடைவெளி கடைபிடித்து பொருட்கள் வழங்கப்படவேண்டும். டோக்கன் எண், தேதி, நேரம் குறிப்பிடவேண்டும். ஊராட்சியில் உள்ள அனைத்து நியாயவிலை கடை கட்டிடங்கள் மற்றும் அதனை சுற்றி 300 மீட்டருக்கு ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் கிருமி நாசினி கொண்டு ஸ்பிரேயர் மூலம் தெளித்திட வேண்டும். நியாய விலைக் கடைகளில் இருந்து 200 மீட்டர் கோடிட்டு இருசக்கர வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்திட வேண்டும். 300 மீட்டர் கோடிட்டு அதற்குள் இரண்டு மீட்டர் சமூக இடைவெளி கடைபிடித்து ஆண்கள் /பெண்கள் வரிசையாக தனித்தனியே அமைத்திட வேண்டும்.

இப்படி தினசரி ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்படவேண்டும். ஒரு குடும்பத்திற்கு ஒரு நபர் மட்டும் டோக்கன் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு வந்து பொருட்களை பெற்றுச் செல்லவேண்டும். ஊராட்சியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள குடும்பங்களுக்கு கிராம உதவியாளர்/ ஊராட்சி செயலர் மூலம் வீட்டிற்கு பொருட்களை கொண்டு வழங்கிட ஏற்பாடு செய்திட வேண்டும் என பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினர் பவுன்ராஜ் தெரிவித்தார்.

Leave a Reply

You cannot copy content of this page